பெங்களூருவில் ஆட்டோக்களில் பயணிக்கும்போது ஓட்டுநர்கள் தவறாக நடந்துகொண்டால அவரைப்பற்றி புகாரளிக்க QR code வசதி அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
ஆட்டோ ஓட்டுநர் அதிக கட்டணம் வசூலித்தாலோ, வண்டியை ஓட்ட மறுத்தாலோ அல்லது தவறாக நடந்துகொண்டாலோ அவருக்கு எதிராக புகாரளிக்க QR code வசதி விரைவில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது. இந்த முறையில் ஆட்டோ ஓட்டுநர் மற்றும் வாகனம் குறித்த விவரங்களும் பயணிகளுக்கு கொடுக்கப்படும். இது 2005ஆம் ஆண்டு ஓட்டுநர் விவரம் அடங்கிய போர்டுகளை ஆட்டோக்களில் வைக்கவேண்டும் என்ற முறையின் மேம்படுத்தப்பட்ட வடிவம் ஆகும்.
ஆட்டோக்களில் இந்த புதிய சாப்ட்வேர் கொள்கைகளை அமல்படுத்த பெங்களூரு போக்குவரத்து காவல்துறையினர் ஆட்டோ ரிக்ஷா யூனியன்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுவருவதாக தி இந்து நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. இந்த QR code முறையானது மும்பை உட்பட பல நகரங்களில் ஏற்கனெவே நடைமுறையில் இருக்கிறது.
இதன்மூலம் புகார்களை எளிதில் தெரிவிக்கமுடியும். இதுதவிர, நகரம் முழுவதுமுள்ள ஆட்டோ ஓட்டுநர்களின் நன்னடத்தையை ஊக்குவிக்கும்விதமாக ஆட்டோ ரிக்ஷாக்களில் கருத்து தெரிவிக்கும் கார்டுகளை வைக்கும் திட்டத்தையும் அறிமுகப்படுத்த ஆட்டோ ரிக்ஷா ஓட்டுநர்கள் சங்கம் ஆலோசித்துவருகிறது. ஓட்டுநர்கள் பயணிகள் கருத்துகளை கொண்டுவந்து யூனிகளில் சமர்பிக்கவேண்டும். அதன் அடிப்படையில் நகரின் சிறந்த ஓட்டுநருக்கான விருது வழங்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.