மேற்குவங்கம் சட்டப்பேரவை தேர்தலுக்கான கடைசிக் கட்ட வாக்குப்பதிவு முடிவடைந்த நிலையில் மாநிலத்தில் கொரோனாவை கட்டுப்படுத்தும் வகையில் பகுதியளவு ஊரடங்கு கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டுள்ளன.
மேற்குவங்க மாநிலத்தில் 8 கட்ட சட்டமன்ற தேர்தலுக்கு இடையில் கொரோனா நோய்த்தொற்று தீவிரமாக பரவி வருகிறது. நேற்று முன்தினம் கடைசி மற்றும் 8வது கட்டத் தேர்தல் நடந்து முடிவடைந்தது. இதையடுத்து கொரோனா தொற்று அதிகரிப்பால் மேற்கு வங்காளத்தில் பகுதியளவு ஊரடங்கு கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டுள்ளன.
மத்திய வருவாய் மாவட்டத்தில் உள்ள அனைத்து மார்க்கெட்களும் அடுத்த 4 நாட்கள் மூடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே கொரோனா பரவலை தடுக்க மார்க்கெட்கள் மூடப்பட்டிருக்கும் நிலையில், இந்த உத்தரவு மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது. வணிக வளாகங்கள், அழகு நிலையங்கள், திரையரங்குகள், விளையாட்டு கூடங்கள், ஸ்பா ஆகியவை தொடர்ந்து மூடப்பட்டு இருக்கும் என மாநில அரசு அறிவித்துள்ளது. மார்க்கெட்டுகள் தினமும் காலை 7-10 மணி, மாலை 3-5 மணி வரை என 5 மணி நேரம் மட்டுமே செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது.
உணவு விடுதிகள், பார்கள், உடற்பயிற்சி கூடங்கள் ஆகியவை திறக்க அனுமதி இல்லை. ஆன்லைன் மூலமான சேவைகளுக்கு அனுமதி போன்ற கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டுள்ளன. மேலும் மேற்கு வங்கம் மாநிலத்தில் 11ஆம் வகுப்பு மாணவர்கள் தேர்வின்றி தேர்ச்சி பெறுவதாக மாநில அரசு நேற்று அறிவித்தது. தற்போதைய நிலவரப்படி, மேற்கு வங்க மாநிலத்தில் 1 லட்சத்து 13 ஆயிரத்து 624 பேர் கொரோனாவுக்கு சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.