அலுவலகத்திலே தங்கவைக்கப்பட்ட ஊழியர்கள்.. பிபிசியில் மூன்றாவது நாளாக தொடர்ந்த ரெய்டு!

அலுவலகத்திலே தங்கவைக்கப்பட்ட ஊழியர்கள்.. பிபிசியில் மூன்றாவது நாளாக தொடர்ந்த ரெய்டு!
அலுவலகத்திலே தங்கவைக்கப்பட்ட ஊழியர்கள்.. பிபிசியில் மூன்றாவது நாளாக தொடர்ந்த ரெய்டு!
Published on

பிபிசி அலுவலகத்தில் நடைபெற்று வரும் வருமான வரித்துறை சோதனைக்கு அரசியல் தலைவர்கள், பத்திரிகையாளர்கள் உள்ளிட்ட பலரும் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

குஜராத் மாநிலத்தில் கடந்த 2002 ஆம் ஆண்டு நடைபெற்ற வன்முறை தொடர்பாக பிபிசி நிறுவனம் அண்மையில் ஒரு ஆவணப்படம் ஒன்றை வெளியிட்டது. 'India: The Modi Question' என்ற பெயரில் இரண்டு பாகங்களாக அந்த ஆவணப் படத்தை பிபிசி வெளியிட்டது.

குஜராத் வன்முறையில் அப்போது அந்த மாநிலத்தின் முதல்வராக இருந்த பிரதமர் மோடிக்கு தொடர்பு இருந்ததாக அந்த ஆவணப்படத்தில் கூறப்பட்டு இருந்ததாக தெரிகிறது. இந்த ஆவணப்படங்களை வெளியிட மத்திய அரசு அதிரடியாக தடை விதித்தது. மேலும் தகவல் தொழில்நுட்ப விதிகள், 2021ன் கீழ் இந்த பதிவுகளை அகற்றுவதற்கு யூடியூப் மற்றும் ட்விட்டர் ஆகிய நிறுவனங்களுக்கும் மத்திய அரசு உத்தரவிட்டது. ஆவணப்படத்திற்கு மத்திய அரசு விதித்த தடைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்குகள் நிலுவையில் உள்ளன.

இத்தகைய சூழலில், கடந்த செவ்வாய்க்கிழமை பிபிசி அலுவலகத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சர்வே எனப்படும் ஆய்வை நடத்தினர். பிபிசி அலுவலகத்தின் நிதி மற்றும் முக்கிய துறைகளின் ஊழியர்களிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். வரி ஏய்ப்பு அதேபோல், நிறுவனத்தின் கணினிகள், செல்போன்கள் ஆகியவை ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது. இந்த சோதனையை ஒட்டி பிபிசி அலுவலத்தில்  பணிபுரியும் ஊழியர்கள், பத்திரிக்கையாளர்கள்  நேற்று முன்தினம் இரவில் இருந்து விடுப்பில் செல்லவும், வீட்டிலிருந்து பணிபுரியவும் அறிவுறுத்தப்பட்டனர்.

வருமான வரித்துறையின் இந்த சோதனை 3-வது நாளாக தொடர்கிறது. பிபிசியின் டெல்லி மற்றும் மும்பை அலுவலகங்களில் நடைபெறும் இந்த சோதனை ஒட்டு மொத்தமாக சுமார் 50 மணி நேரத்தை கடந்து நடைபெற்று வருகிறது. இரண்டு நாட்கள் தொடர்ந்து விசாரணை நடைபெற்ற நிலையில், நேற்று பிபிசி ஊழியர்கள் வீட்டுக்கு சென்று ஓய்வு எடுக்க அனுமதி அளிக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இன்று அலுவலகத்திற்கு வந்த ஊழியர்களிடம் விசாரணை நடப்பதாகவும் கூறப்படுகிறது. 10 முதல் 12 ஊழியர்கள் அலுவலகத்திற்குள் முகாமிட்டுள்ளனர்.

இதனிடையே, பிபிசி நிறுவனம் தனது ஊழியர்களுக்கு முக்கிய உத்தரவு ஒன்றை கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த உத்தரவில், ஊழியர்கள் யாரும் தங்கள் எலக்ட்ரானிக் கருவிகளில் உள்ள எந்த ஒரு டேட்டாவையும் அழிக்கவோ மறைக்கவோ வேண்டாம் என்று கூறப்பட்டுள்ளதாம். அதோடு, விசாரணை அதிகாரிகள் எப்போது அழைத்தாலும் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் எனவும் பிபிசி தனது ஊழியர்களை கேட்டுக்கொண்டு இருப்பதாக பிரபல ஆங்கில ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. அதேபோல், வருமான வரித்துறை அதிகாரிகள் எழுப்பும் எந்த ஒரு கேள்விக்கும் பதிலளிக்க தயாராக இருக்க வேண்டும் எனவும் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் எனவும் பிபிசி நிறுவனம் மூத்த ஊழியர்களிடம் கேட்டுக்கொண்டு இருப்பதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

பிபிசி அலுவலகத்தில் நடைபெற்று வரும் இந்த சோதனைக்கு அரசியல் தலைவர்களும் பத்திரிகையாளர் அமைப்புகளை சேர்ந்தவர்களும் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். வருமான வரித்துறையின் இந்த செயல், மத்திய அரசின் பழிவாங்கும் நடவடிக்கை என குற்றம்சாட்டி வருகின்றன. மும்பை பிரஸ் கிளப் வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஊடகங்களின் மீதான இந்த அச்சுறுத்தல் நிறுத்தப்பட வேண்டும். ஊடக சுதந்திரத்துக்கு மதிப்பளித்து பத்திரிகையாளர்கள் தங்களது பணியை தொடர அனுமதிக்க வேண்டும்'' என்று கேட்டுக்கொண்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com