கர்நாடக மாநிலத்தின் புதிய முதலமைச்சராக பசவராஜ் பொம்மை பதவியேற்றுக்கொண்டார். அவருக்கு ஆளுநர் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
இரண்டு ஆண்டுகள் நிறைவு செய்ததையொட்டி கர்நாடக முதலமைச்சராக இருந்த எடியூரப்பா தனது பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து பல்வேறு ஆலோசனைகளுக்கு பிறகு எடியூரப்பாவைபோலவே லிங்காயத்து பிரிவைச் சேர்ந்த ஒருவரை முதலமைச்சராக்க வேண்டும் என முடிவு எடுக்கப்பட்டது. அதன்படி இன்று கர்நாடக மாநிலத்தின் புதிய முதலமைச்சராக பசவராஜ் பொம்மை பதவியேற்றுக்கொண்டார். ராஜ்பவனில் அவருக்கு ஆளுநர் தவார் சந்த் கெலாட் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
கர்நாடக முன்னாள் முதல்வரின் மகன் முதல்வராக பதவியேற்றிருப்பது இது இரண்டாவது முறை ஆகும். ஏற்கெனவே முன்னாள் முதல்வர் ஹெச்.டி.தேவகவுடாவின் மகன் எச்.டி. குமாரசாமி முதல்வராக பதவி வகித்துள்ளார். இதையடுத்து தற்போது கர்நாடக முன்னாள் முதல்வர் எஸ்.ஆர்.பொம்மையின் மகன் தான் பசவராஜ் பொம்மை முதல்வராக பதவியேற்றுள்ளார். இவருக்கு வயது 61.
பசவராஜ் பொம்மையின் தந்தை எஸ்.ஆர். பொம்மை 1988-1989ல் கர்நாடக முதல்வராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஜனதா தள கட்சியில் இருந்த பசுவராஜ் பொம்மை 2008 ஆம் ஆண்டில் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார்.