ஹிஜாப் தொடர்பாக கர்நாடக உயர் நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பை அனைவரும் மதித்து நடந்துகொள்ள வேண்டும் என கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார்.
தீர்ப்பிற்கு பின் பேசிய முதலமைச்சர், நீதிமன்றத்தின் ஆணையை அமலாக்க சம்மந்தப்பட்ட தரப்பினர் மாநில அரசிற்கு ஒத்துழைப்பு தர வேண்டும் என கேட்டுக்கொண்டார். நீதிமன்றத்தின் தீர்ப்பை ஏற்றுக்கொண்டு மாணவிகள் கல்வியில் கவனத்தை செலுத்தவேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார். சட்டத்தை யாராவது கையில் எடுத்துக்கொண்டால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் முதலமைச்சர் எச்சரித்தார். இதற்கிடையே கர்நாடக உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு மிகுந்த ஏமாற்றம் தருவதாக காஷ்மீர் முன்னாள் முதலமைச்சரும் மக்கள் ஜனநாயக கட்சி தலைவருமான மெகபூபா முஃப்தி தெரிவித்துள்ளார்.
இது மதம் தொடர்பானது மட்டுமல்ல என தெரிவித்துள்ள அவர், விரும்பியதை பின்பற்றக் கூடிய சுதந்திரம் என்ற கோணத்திலும் பார்க்கவேண்டும் என மெகபூபா தெரிவித்துள்ளார். காஷ்மீரின் மற்றொரு முன்னாள் முதல்வரான உமர் அப்துல்லாவும் ஏமாற்றம் தெரிவித்துள்ளார். நீதிமன்றத்தின் தீழ்ப்பு தனி நபர்களின் நம்பிக்கைகளை வழக்கொழிய வைப்பதாகவும் ஜனநாயகத்தை பாதிப்பதாகவும் காஷ்மீர் மக்கள் மாநாடு கட்சியின் தலைவர் சஜத் லோன் தெரிவித்துள்ளார்.