இந்தி தேசிய மொழி அல்ல என்ற கன்னட நடிகர் சுதீப்பின் கருத்துக்கு கர்நாடக முதலமைச்சரும், பாரதிய ஜனதாவின் மூத்த தலைவர்களில் ஒருவருமான பசவராஜ் பொம்மையும் ஆதரவு தெரிவித்துள்ளார்.
இந்தி தேசிய மொழியா என்பது குறித்து பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன் மற்றும் கன்னட நடிகர் சுதீப் இடையே ட்விட்டரில் நடைபெற்ற வாக்குவாதம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் முதலமைச்சருமான சித்தராமையா ட்விட்டரில் பதிவு ஒன்றை இட்டிருந்தார். அதில் இந்தி ஒருபோதும் தேசிய மொழி அல்ல எனக் குறிப்பிட்டிருநதார். இந்தியாவின் பன்மொழித் தன்மையை ஒவ்வொரு குடிமகனும் மதிக்கவேணடும் என்றும் அவர் அறிவுறுத்தியிருந்தார்.
ஒவ்வொரு மொழிக்கும் ஒரு வரலாறு உள்ளது என்றும், ஒவ்வொருவரும் தமது மொழி குறித்து பெருமிதப்பட பல விஷயங்கள் உள்ளன என்றும் சித்தராமையா தெரிவித்திருந்தார். இதேபோல் இந்தி தேசிய மொழி அல்ல என்ற நடிகர் சுதீப்பின் கருத்தை, தானும் ஆதரிப்பதாக முன்னாள் முதலமைச்சர் குமாரசாமி தெரிவித்திருந்தார்.
அதிகம் பேர் பேசுவதால் மட்டும் இந்தி தேசிய மொழி ஆகிவிட முடியாது என்றும் அவர் தெரிவித்திருந்தார். மாநில மொழிகளை சிதைக்கும் பணியை காங்கிரஸ் தொடங்கிவைத்ததாகவும், அதை பாரதிய ஜனதா விரிவுப்படுத்தி வருவதாகவும் குமாரசாமி குற்றஞ்சாட்டியிருந்தார். இந்நிலையில் இந்தி மொழி சர்ச்சையில் கன்னட நடிகர் சுதீப் தெரிவித்த கருத்துக்கு அம்மாநில முதலமைச்சரும், பாரதிய ஜனதாவின் மூத்த தலைவர்களில் ஒருவருமான பசவராஜ் பொம்மை ஆதரவு தெரிவித்துள்ளார்.