அமெரிக்காவின் 16வது மிகப்பெரிய வங்கியான சிலிக்கான் வேலி வங்கியின் பங்குகள் கடுமையாகச் சரிந்ததைத் தொடர்ந்து அவ்வங்கி திவாலானதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் மும்பையை தலைமையிடமாகக் கொண்டு எஸ்.வி.சி. (SVC) வங்கி இயங்குகிறது. இந்த வங்கிதான் திவாலாகிவிட்டது என வதந்தி பரவ, வாடிக்கையாளர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
இதையடுத்து, எஸ்.வி.சி. வங்கி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து அது வெளியிட்டுள்ள அறிக்கையில், “எஸ்.வி.சி. (SVC) வங்கிக்கும், கலிபோர்னியாவில் உள்ள சிலிக்கான் வேலி வங்கிக்கும் (SVB) முற்றிலும் தொடர்பில்லை. எங்கள் உறுப்பினர்கள், வாடிக்கையாளர்கள் மற்றும் பிற பங்குதாரர்கள் பிராண்ட் பெயர்களில் ஒற்றுமையை ஏற்படுத்தும் வதந்திகளில் கவனம் செலுத்த வேண்டாம். எஸ்.வி.சி. வங்கியின் பிராண்ட் இமேஜை கெடுக்கும் வகையில் வதந்தி பரப்புபவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
ஷாம்ராவ் வித்தல் கூட்டுறவு வங்கி என முன்னர் அறியப்பட்ட எஸ்.வி.சி. வங்கி 116 ஆண்டுகள் பழமையான, நகர்ப்புற கூட்டுறவு வங்கி. எங்களின் நிதிநிலைமைகள் வலுவாக உள்ளன. 2021-22ஆம் நிதியாண்டில் ரூ.31,500 கோடிக்கு வர்த்தகம் நடந்துள்ளது. ரூ.146 கோடி லாபம் ஈட்டியுள்ளோம்” என அதில் தெளிவுபடுத்தியுள்ளது.
இரு வங்கிகளுக்கும் இருக்கும் பெயர் மற்றும் லோகோ நிறமே இப்பிரச்சினைக்குக் காரணமாகச் சொல்லப்படுகிறது. இதனை வைத்துக்கொண்டுதான், எஸ்.வி.சி. எனும் கூட்டுறவு வங்கி திவாலாகிவிட்டதாக புரளி கிளப்பி விட்டுள்ளனர் என விசாரணையில் தெரிய வந்திருக்கிறது.
அமெரிக்காவின் 16வது மிகப்பெரிய வங்கி சிலிக்கான் வேலி வங்கியாகும். இவ்வங்கி, சுருக்கமாக எஸ்.வி.பி. என அழைக்கப்படுகிறது. இது, அமெரிக்காவின் கலிபோர்னியாவை தலைமையிடமாகக் கொண்டு இயங்கிவருகிறது. இந்த நிலையில், அவ்வங்கியின் பங்குகள் கடுமையாகச் சரிந்ததைத் தொடர்ந்து சிலிகான் வேலி வங்கி திவாலானதாக தகவல் வெளியாகி இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
- ஜெ.பிரகாஷ்