பணமதிப்பு நீக்க நடவடிக்கையின் போது அகமதாபாத் கூட்டுறவு வங்கியில் அதிகப்பணம் டெபாசிட் செய்யப்பட்டிருப்பதாக ஆர்டிஐ தகவல் கூறுகிறது. இதன் இயக்குநராக பாஜக தேசியத்தலைவர் அமித் ஷா உள்ளார்.
சமூக ஆர்வலர் மனோரஞ்சன் எஸ்.ராய் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம், பணமதிப்பு நீக்க நடவடிக்கையின் போது எந்தெந்த வங்கியில் எவ்வளவு பணம் டெப்பாசிட் செய்யப்பட்டது என்பது குறித்த தகவல்களை கோரியிருந்தார். இதற்கு நபார்டு வங்கியின் தலைமை பொது மேலாளர் சரவணவேல் பதிலளித்துள்ளார். அதில் மிக அதிகபட்சமாக குஜராத் மாநிலம் அகமதாபாத் மாவட்ட கூட்டுறவு வங்கியில் ரூ.745.59 கோடி டெபாசிட் செய்யப்பட்டது தெரியவந்துள்ளது. மேலும் குஜராத்தின் ராஜ்கோட் மாவட்ட கூட்டுறவு வங்கி இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. இந்த வங்கியில் 693.19 கோடி டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக 7 பொதுத்துறை வங்கிகள், 32 மாநில கூட்டுறவு வங்கிகள், 370 மாவட்ட கூட்டுறவு வங்கிகளில் மட்டும் ரூ.7.9 லட்சம் கோடி டெபாசிட் செய்யப்பட்டுள்ளதாக ஆர்.டி.ஐ. மூலம் கிடைத்த தகவல் தெரிவிக்கிறது.
பணமதிப்பு நீக்க நடவடிக்கையின் போது மாவட்ட கூட்டுறவு வங்கிகளில் அதிகளவில் பணம் டெப்பாசிட் செய்யப்பட்டது. கூட்டுறவு வங்கிகளில் கருப்புப்பணம் மாற்றப்படும் வாய்ப்புகள் இருந்ததால் பழைய ரூபாய் நோட்டுகளை டெபாசிட் செய்ய தடை விதிக்கப்பட்டது. 5 நாட்களுக்குள் இவ்வளவு பெரிய தொகை இரு கூட்டுறவு வங்கிகளில் டெபாசிட் செய்யப்பட்டதும் அந்த வங்கிகளில் வேலை செய்யும் பலருக்கு தொடர்பிருக்கலாம் என எதிர்க்கட்சிகள் தெரிவித்துள்ளன. பண மதிப்பிழப்பு சமயத்தில் டெபாசிட் செய்யப்பட்ட பணம் குறித்தும் அவை சரியான முறையில் ஈட்டப்பட்டதுதானா என்பது குறித்தும் தொடர்ந்து மத்திய அரசு விசாரித்து வருகிறது. ஏற்கனவே தவறான முறையில் டெபாசிட் செய்யப்பட்ட , முறைகேடான பணத்தை கண்டறிந்து மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.