வங்கி சேமிப்புக் கணக்குகளில் பணம் எடுப்பதற்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் இன்று முதல் முழுமையாக அகற்றப்பட்டுள்ளன. இதையடுத்து, கடந்த நவம்பர் 8ஆம் தேதி அறிவிக்கப்பட்ட பணமதிப்பு நீக்க நடவடிக்கைக்கு முன்பிருந்த நிலை, தற்போது திரும்பியுள்ளது. கட்டுப்பாடுகளைத் திரும்பப் பெறுவது தொடர்பான அறிவிப்பை கடந்த மாதம் 8ம் தேதி ரிசர்வ் வங்கி வெளியிட்டது. அந்த அறிவிப்பு இன்று முதல் அமலுக்கு வருகிறது.
கடந்த ஆண்டு நவம்பர் 8ம் தேதி பணமதிப்பு நீக்க அறிவிப்பை பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டார். அதன்படி, பழைய 500 மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டது. இதன்பின் சேமிப்பு கணக்கிலிருந்து வாரம் 4 ஆயிரம் ரூபாய் மட்டுமே எடுக்க அனுமதிக்கப்பட்டது. இது படிப்படியாக அதிகரிக்கப்பட்டு கடந்த பிப்ரவரி 20ம் தேதி ரூ. 50 ஆயிரமாக உயர்த்தப்பட்டது. இந்நிலையில் இந்தக் கட்டுப்பாடுகள் இன்று முழுமையாக அகன்றுள்ளது.