பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வங்கி ஊழியர்கள் நாளை வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர்.
வாராக் கடன்களுக்கு வங்கி உயர் அதிகாரிகள் பொறுப்பு ஏற்கவேண்டும், நிரந்தர வேலைவாய்ப்புகளை அயலக சேவைக்கு விடுவதை அனுமதிக்க கூடாது என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கத்தினர் வலியுறுத்தியுள்ளனர். ஒருங்கிணைந்த வங்கி ஊழியர்கள் சங்க கூட்டமைப்பில் மொத்தம் 9 சங்கங்கள் உள்ளன. இவற்றில் பாஜகவின் பாரதீய மஸ்தூர் சங்கத்தின் தேசிய வங்கி ஊழியர்கள் அமைப்பு, தேசிய வங்கி அதிகாரிகள் அமைப்பு ஆகிய இரண்டும் வேலை நிறுத்தத்தில் கலந்து கொள்ளாது என்று தெரிகிறது. மற்ற 7 சங்கங்களும் வேலை நிறுத்ததில் பங்கேற்கின்றன. பாரத ஸ்டேட் வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கி, பாங்க் ஆப் பரோடா ஆகியவை பிப்ரவரி 28-ந்தேதி வங்கி கிளைகளின் பணிகள் பெரிதும் பாதிக்கப்படலாம் என்று ஏற்கனவே தங்களது வாடிக்கையாளர்களுக்கு தகவல் தெரிவித்து விட்டன. ஐ.சி.ஐ.சி.ஐ., எச்.டி.எப்.சி., ஆக்சிஸ், கோடக் மகிந்திரா ஆகிய தனியார் வங்கிகளில் காசோலைகளை மாற்றும் சேவை கடுமையாக பாதிக்கப்படும் என்று தெரிகிறது.