51 வாடிக்கையாளர்களின் கையெழுத்தைப்போட்டு 28 லட்ச ரூபாயை வங்கி காசாளரே கொள்ளையடித்தச் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மும்பையை சேர்ந்த கோ - ஆபரேட்டிவ் வங்கியில் காசாளராக பணியாற்றி வருபவர் அன்குஷ் ராகேத். இவர் கடந்த 3 வருடங்களாக வாடிக்கையாளர்களின் கணக்கில் இருந்து பணத்தை நூதனமாக திருடி வந்துள்ளார். வங்கி ஆடிட்டின் போது அன்குஷ் செய்த மோசடி தெரிய வந்துள்ளது. அதன்படி வங்கி வாடிக்கையாளர்கள் 51 பேரின் கையெழுத்துகளை பயன்படுத்தி அவர்களது பணத்தை கொள்ளையடித்துள்ளார் காசாளர் அன்குஷ்.
பிர்பாலா ஷா என்ற பெண் வாடிக்கையாளர் கோ - ஆபரேட்டிவ் வங்கியில் கணக்கு வைத்துள்ளார். ஒருநாள் விட்டு ஒருநாள் அவரது கணக்கில் இருந்து ரூ.20 ஆயிரம் எடுக்கப்பட்டு வந்துள்ளது. இதனால் சந்தேகம் அடைந்த வங்கியின் துணை மேலாளர் ராஜேந்திர ஜாதவ், பிர்பலா ஷாவிடம் இது குறித்து விசாரித்துள்ளார்.
ஆனால் அந்தக் குறிப்பிட்ட மாதத்தில்தான் எந்தப் பணபரிவர்த்தனையிலும் ஈடுபடவில்லை எனத் தெரிவித்துள்ளார். இதன் மூலமே அன்குஷ் ராகேத்தின் வங்கி மோசடி தெரியவந்துள்ளது. காசாளர் அன்குஷை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் வங்கி ஊழியர்கள் வேறு யாருக்காவது இந்த மோசடியில் தொடர்பு உள்ளதா என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.