பெங்களூரில் பிபிஓ நிறுவனத்தில் பணிபுரியும் 22 வயது பெண் ஒருவர் தன்னுடன் பணிபுரிந்து வந்த இளைஞர் ஒருவரை காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த வாரம் இவர் தன் காதலனுக்கு தெரியாமல் அவரது செல்போனில் இருக்கும் தனது புகைப்படங்களை பார்த்துள்ளார். காதலன் இல்லாத சமயத்தில் அவரது செல்போனை எடுத்துப் பார்க்கையில், அப்பெண்ணின் புகைப்படம் மட்டுமல்லாது அவருடன் பணிபுரியும் பல பெண்களின் ஆபாச படங்கள் அதில் இருந்துள்ளன. சுமார் 13000-க்கும் மேற்பட்ட புகைப்படங்கள், வீடியோக்கள் அதில் இருப்பதைக்கண்டு அதிர்ந்துள்ளார்.
என்னசெய்வது என்று யோசித்த அப்பெண், அவர் மட்டுமல்லாது தன்னுடன் சேர்ந்த அத்தனை பெண்களையும் காப்பாற்ற நினைத்து அலுவலகத்தில் உள்ள உயர்மட்ட அதிகாரிகளிடம் இதுபற்றி ஆலோசித்துள்ளார்.
விவரத்தை தெரிந்துகொண்ட அந்நிறுவனத்தின் சட்டப்பிரிவுத் தலைவர், சம்பந்தப்பட்ட இளைஞர் மீது சைபர் கிரைம் காவல் நிலையத்தில் கடந்த வாரம் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் காவல்துறை அந்த இளைஞரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறது.
சமூக ஊடகங்கள் அதிகரித்து வரும் இன்றைய காலகட்டங்களில் பெண்கள் அதிக விழிப்புணர்வுடன் இருப்பது அவசியமான ஒன்று. அதேநேரம், இப்படியான குற்றங்கள் நிகழ்கையில், அதை தைரியமாக எதிர்கொண்டு சட்ட வல்லுநர்களின் உதவியை பெறுவது கட்டாயம். பாதிக்கப்படுவோரின் மௌனமே, குற்றவாளிகளின் கேடயம். மௌனம் கலைப்போம், உரிமை காப்போம்!