ஒடிசாவில் பாலசோர் அருகே கடந்த மாதம் 2ஆம் தேதி சென்னை நோக்கி வந்த கொல்கத்தா- சென்னை கோரமண்டல் எக்ஸ்பிரஸ், லைன் மாறி சென்றதில் சரக்கு ரயிலில் மோதி தடம் புரண்டது. அப்போது அருகே வந்த மற்றொரு பயணிகள் ரயிலும் இதில் மோதி தடம் புரண்டது. இந்த கோர விபத்தில் 292 பேர் உயிரிழந்தனர், 1000-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்தியாவில் சமீப காலத்தில் நடந்த மிக மோசமான ரயில்வே விபத்துகளில் ஒன்றாக மாறியது.
இந்த ரயில் விபத்து குறித்து ரயில்வே பாதுகாப்பு ஆணையம் (CRS) மற்றும் சிபிஐ தனித்தனியாக விசாரணை நடத்தி வருகிறது. இதில் ரயில்வே பாதுகாப்பு ஆணையம் விசாரணை நடத்தி முடித்து தனது அறிக்கையை ரயில்வே வாரியத்திடம் சமர்ப்பித்துள்ளது. இந்நிலையில், ஒடிசா ரயில் விபத்தில் தவறான சிக்னல் கொடுத்ததுதான் காரணம் என்பது உயர்மட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. சிக்னல் மற்றும் தொலைத்தொடர்பு துறையில் பல குறைபாடுகள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதற்கு முன்பு பாதுகாப்புக் காரணங்களுக்காக வடிவமைப்பில் சில மாற்றங்கள் செய்யப்பட்ட நிலையில், அதன் பின்னர் போதுமான பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றாத அதிகாரிகளின் அலட்சியம் குறித்தும் குறிப்பிடப்பட்டுள்ளது. விபத்து நடந்த இடமான பஹானாகா பஜாரின் ஸ்டேஷன் மாஸ்டர் முன்கூட்டியே சுதாரித்து நடவடிக்கை எடுத்திருந்தால் தவறாக கொடுக்கப்பட்ட சிக்னலை திருத்தி விபத்தைத் தவிர்த்திருக்கலாம் என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் விபத்து நடந்த இடத்திற்கு அருகில் பழுதுபார்க்கும் பணியின்போது அங்கீகரிக்கப்பட்ட சர்க்யூட் வரைபடத்தை சம்பந்தப்பட்ட ரயில்வே ஸ்டேஷன் வழங்கவில்லை. இதுவே தவறான சிக்னலுக்கு வழிவகுத்த ஒரு தவறான நடவடிக்கையாக அமைந்துவிட்டது. தண்டவாளங்களில் செய்யப்பட்ட மாற்றங்கள் சென்ட்ரல் வரைபடத்தில் அப்டேட் ஆகவில்லை என்பதும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பாலசோர் ரயில் விபத்து சம்பவம் தொடர்பாக தென்கிழக்கு ரயில்வே கடந்த வாரம் ஐந்து உயர் அதிகாரிகளை பணிநீக்கம் செய்தது குறிப்பிடத்தக்கது.