பாகிஸ்தானின் பாலக்கோட்டில் உள்ள பயங்கரவாத முகாம் மீண்டும் செயல்படத் தொடங்கியுள்ளதாக ராணுவ தளபதி பிபின் ராவத் தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய பிபின் ராவத், “காஷ்மீரில் பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கும் அவர்களுக்கு உதவியவர்களுக்குமான தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது. காஷ்மீர் மக்களிடையே தகவல் தொடர்பு பாதிக்கப்படவில்லை. பாலக்கோட்டில் உள்ள பயங்கரவாத முகாம் மீண்டும் செயல்பட தொடங்கியுள்ளது. குறைந்தபட்சம் 500 பயங்கரவாதிகள் இந்தியாவுக்குள் ஊடுருவ காத்துக் கொண்டிருக்கிறார்கள்.
பயங்கரவாதிகள் நம்முடைய எல்லைக்குள் நுழையவே பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல்களை நடத்தி வருகிறது. இத்தகைய அத்துமீறிய தாக்குதல்களை எப்படி எதிர்கொள்வது என்பது நமக்கு தெரியும். பெரும்பாலான ஊடுருவல் முயற்சிகளை நம்முடைய பாதுகாப்பு படை வீரர்கள் முறியடித்துள்ளார்கள்.
இஸ்லாம் குறித்து தவறான புரிதலை சிலர் அதிக அளவிலான மக்களுக்கு பரப்பி அதன் மூலம் சிக்கல்களை உருவாக்க நினைக்கிறார்கள். அதனால், இஸ்லாமின் சரியான அர்த்தத்தை அதனை புரிந்தவர்கள் பரப்ப வேண்டும்” என்று கூறினார்.