உலகின் அதிக மதிப்பு வாய்ந்த இருசக்கர வாகன நிறுவனம் என்ற பெருமையை பெற்றிருக்கிறது, பஜாஜ் ஆட்டோ.
தேசியப் பங்குச் சந்தையில், இந்தியாவின் முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனங்களில் ஒன்றான பஜாஜ் நிறுவனத்தின் சந்தை மூலதன மதிப்பு ரூ.1 லட்சம் கோடியை தாண்டியது. இதன்மூலம் இந்த மைல்கல்லை தொட்ட உலகின் முதல் இருசக்கர வாகன நிறுவனம் என்ற பெருமையை பெற்றிருக்கிறது அந்நிறுவனம்.
கடந்த வெள்ளிக்கிழமை அன்று, பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் ஒரு பங்கு விலை 3,479 ரூபாயாக வர்த்தகமானது. இதனால், அந்நிறுவனம் வெளியிட்டிருக்கும் மொத்த பங்குகளின் மதிப்பு ரூ.1 லட்சம் கோடியை தாண்டியது. சர்வதேச அளவில் வேறெந்த இருசக்கர வாகன நிறுவனமும் ரூ.1 லட்சம் கோடி என்ற சந்தை மூலதன மதிப்பை இதுவரை தொட்டதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் லாக்டவுன் கட்டுப்பாடுகள் மூலம் ஆட்டோமொபைல் நிறுவனங்கள் அதிகளவிலான வர்த்தகப் பாதிப்புகளை எதிர்கொண்ட போதிலும், பஜாஜ் ஆட்டோ அதிகளவிலான விற்பனை செய்து புதிதாக வாடிக்கையாளர்கள் எண்ணிக்கையை அதிகரித்துள்ளது. குறிப்பாக கிராமம் மற்றும் ஊரகப் பகுதிகளில் பஜாஜ் அதிகளவிலான வாகனங்களை விற்பனை செய்துள்ளது.