அயோத்தி பிரச்னை - சமரசக் குழு உறுப்பினர்களின் பின்னணி

அயோத்தி பிரச்னை - சமரசக் குழு உறுப்பினர்களின் பின்னணி
அயோத்தி பிரச்னை - சமரசக் குழு உறுப்பினர்களின் பின்னணி
Published on

அயோத்தி பிரச்னைக்கு தீர்வு காண 3 பேர் கொண்ட சமரசக் குழு அறிவிக்கப்பட்டுள்ளது. இக்குழுவில் ‌உள்ளவர்களின் பின்னணி குறித்து தற்போது ‌பார்க்கலாம்.

அயோத்தி பிரச்னைக்கான சமரசக் குழுவின் தலைவராக ஓய்வு பெற்ற நீதிபதி இப்ராஹிம் கலிஃபுல்லா நியமிக்கப்பட்டுள்ளார். இவர் தமிழகத்தின் காரைக்குடியை சேர்ந்தவர். 1975ம் ஆண்டு வழக்கறிஞராக பணிபுரியத் தொடங்கிய இவர் 2000ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார். 2011ம் ஆண்டு காஷ்மீர் உயர் நீதிமன்ற நீதிபதியாக மாற்றப்பட்ட‌ கலிஃபுல்லா அதே ஆண்டில் தலைமை நீதிபதியாக பதவி உயர்வு பெற்றார். இந்நிலையில் 2012ம் ஆண்டில் உச்ச நீதிமன்ற நீதிபதியாக கலிஃபுல்லா மாற்றப்பட்டார். 2016ம் ஆண்டு நீதிபதி பணியிலிருந்து கலிஃபுல்லா ஓய்வு பெற்றார். 

சமரச குழுவின் மற்றொரு உறுப்பினரான ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர், தமிழகத்தின் கும்பகோணத்தை அடுத்துள்ள பாப‌நாசத்தை சே‌ர்ந்தவர். வாழும் கலை என்ற அமைப்பை நடத்தி வரும் இவர், அயோத்தி பிரச்னையில் ஏற்கனவே சமரச பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டவர் ஆவார். வடகிழக்கு மாநிலங்களில் அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தி வரும் பயங்கரவாத அமைப்புகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை சரணடைய வைத்துள்ளார், இலங்கை பிரச்னையில் அந்நாட்டு அரசுக்கும் விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கும் மத்தியில் சமரசம் ஏற்படுத்தவும் இவர் முயற்சிகளை மேற்கொண்டிருந்தார். தென் அமெரிக்கா நாடான கொலம்பியாவிலும் அரசு மற்றும் கொரில்லா பயங்கரவாதிகள் மத்தியில் சமரச பேச்சுவார்த்தை நடத்தி அதில் தீர்வு கண்டுள்ளார். 

சமரச குழுவில் இடம் பெற்றுள்ள ஸ்ரீராம் பஞ்சு சென்னையை சேர்ந்த மூத்த வழக்கறிஞர் ஆவார். குடு‌ம்ப‌ தகராறு, வணிக தகராறு, சொத்துரிமை பிரச்னை என பல தரப்பட்ட‌ பிரச்னைகளுக்கு மத்தியஸ்தம் செய்து வைப்பதில் 20 ஆண்டுகள் நிபுணத்துவம் பெற்றவர் ஸ்ரீராம் பஞ்சு. நாட்டின் சிறந்த மத்தியஸ்தர்களில‌ ஒருவர் என பெயர் பெற்ற ஸ்ரீராம் பஞ்சு, பல்வேறு முக்கிய விவகாரங்களில் தீர்வு காணும் பணியை செய்துள்ளார். சர்வதேச அளவிலும் மத்திய‌ஸ்த பணிகளில் சிறந்து விளங்கும் ஸ்ரீராம் பஞ்சுவுக்கு சிங்கப்பூர் சர்வதேச மையமும் சிறந்த மத்தியஸ்தர் என சான்றளித்திருந்தது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com