லட்சக்கணக்கான புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் நிலைமை உணர்ந்து நான்காம் கட்ட ஊரடங்கில் சில தளர்வுகளை அறிவித்தது மத்திய அரசு. மேலும் வேறு மாநிலங்களில் சிக்கித் தவிக்கும் புலம்பெயர் தொழிலாளர்களை மீட்கச் சிறப்பு ரயில்களை இயக்க தொடங்கியது. அதனால் பல லட்சக் கணக்கான மக்கள் அந்த ரயில்களில் தங்களின் சொந்த பகுதிக்குத் திரும்பி வருகின்றனர்.
இந்நிலையில் சமூக வலைத்தளத்தில் ஒரு வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. வெளியாகியுள்ள அந்த வீடியோவில் குழந்தை ஒன்று ரயிலே ப்ளாட் ஃபாரத்தில் போர்வையால் மூடப்பட்டுள்ள ஒருவரைப் பலமுறை விடாமல் எழுப்ப முயல்கிறது. ஆனால் அந்தக் குழந்தை எவ்வளவு முயன்றும் அந்தப் போர்வைக்குள் இருப்பவர் எழவே இல்லை. மேலும் அசைவுகளும் இல்லை. இந்த வீடியோ குறித்த செய்திக் குறிப்பை என்.டி.டிவி செய்தி தளம் வெளியிட்டுள்ளது. அந்தப் போர்வைக்குள் இருப்பவர் அந்தக் குழந்தையின் தாய் என்பதும், அவர் ஒரு புலம்பெயர் தொழிலாளி என்பதும் விசாரணையின் மூலம் தெரிய வந்துள்ளது.