அசாமின் ஹைலகண்டி மாவட்டத்தில் பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட சிலர் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர். அந்த வகையில், 15 மாத குழந்தை அவ்வகை காய்ச்சலால் பாதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, அந்தக் குழந்தையும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளது. ஆனால், குழந்தைக்கு வெண்டிலேட்டர் சிகிச்சை தேவை என மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.
இதை குழந்தையுடன் வந்த உறவினர்கள் ஏற்கவில்லை. அத்துடன் குழந்தையையும் பெற்றுக் கொண்டு வீட்டுக்குத் திரும்பிச் சென்றுள்ளனர். ஆனால், அந்தக் குழந்தைக்கு முழுச் சிகிச்சை பெறாமல் அவர்கள் எடுத்துச் சென்றதால் துரதிருஷ்டவசமாக அந்தக் குழந்தை இறந்துபோனது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து சில்சார் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் (எஸ்எம்சிஎச்) முதல்வர் டாக்டர் பாஸ்கர் குப்தா, "குழந்தை மிகவும் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது. குழந்தையை வென்டிலேட்டர் வைத்துச் சிகிச்சையளிக்க மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர். ஆனால் குழந்தையின் உறவினர்கள் அதை ஏற்றுக் கொள்ளவில்லை. குழந்தையையும் பாதி சிகிச்சையிலேயே திரும்பப் பெற்றுச் சென்றனர்” எனத் தெரிவித்துள்ளார்.