கர்நாடக மாநிலத்தில் நான்கு கால்களுடன் பிறந்த குழந்தைக்கு அறுவைச் சிகிச்சை மூலம் கூடுதல் கால்கள் நீக்கப்பட்டன.
கர்நாடகாவின் ராய்ச்சூர் மாவட்டம் புலந்தின்னி கிராமத்தை சேர்ந்த சென்னபசவா- லலிதம்மா தம்பதியினருக்கு கடந்த மாதம் 21 ஆம் தேதி ஆண் குழந்தை பிறந்தது. பிறக்கும் போது நான்கு கால்கள் மற்றும் இரண்டு பிறப்புறுப்புகளுடன் அந்த குழந்தை பிறந்துள்ளது. இந்நிலையில் அந்தக் குழந்தைக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு தேவையற்ற உறுப்புகள் நீக்கப்பட்டன. தற்போது குழந்தை நலமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
குரோமோசோம் குறைபாட்டினால் இதுபோன்ற குழந்தைகள் பிறக்கின்றன என மருத்துவர்கள் தெரிவிக்கின்றன. குழந்தையின் தாய் கர்ப்பமாக இருக்கும் போது இரட்டை குழந்தைகள் உருவாகி, உறுப்புகள் வளர்ந்த பின், ஒரு கருவானது சிதைவதால் இத்தகைய பாதிப்புகள் ஏற்படுவதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். இப்படி பாதி வளர்ச்சி அடைந்த உறுப்புகளானது கருவுக்குள் இருக்கும் மற்றொரு குழந்தையின் உடல் பாகத்துடன் சேர்ந்து வளர்ந்து விடுகிறது என அவர்கள் கூறுகின்றனர். இந்நிலையில் 20 மருத்துவர்கள் அடங்கிய குழு சுமார் 4 மணி நேரம் இக்குழந்தைக்கு அறுவை சிகிச்சை மேற்கொண்டு, தேவையற்ற உறுப்புகளை அகற்றியுள்ளது.