கேரளாவின் எர்ணாகுளம் பனம்பள்ளிநகர் என்ற பகுதி அருகில் உள்ள வித்யாநகர் குடியிருப்பு பகுதியில், இன்று காலை எட்டு மணியளவில் சாலையில் ஒரு துணிமூட்டை கிடந்துள்ளது. அதைக் கண்ட பொதுமக்கள் அது என்ன என்று அருகில் சென்று பார்க்கையில் அதிர்ச்சியடைந்துள்ளனர். காரணம் அத்துணியில் பிறந்து சில நாட்களே ஆன பச்சிளம் ஆண் குழந்தை ஒன்று ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்துள்ளது.
அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் உடனடியாக இது குறித்து அருகில் இருந்த காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இறந்து கிடந்த குழந்தையை மீட்டதுடன், அது யார் குழந்தை என்ற விசாரணையை தெடங்கியுள்ளனர். இதுதொடர்பாக அப்பகுதியில் இருக்கும் சிசிடிவி கேமராவை ஆய்வு செய்தனர்.
அதில், காலை எட்டுமணியளவில் அருகில் இருக்கும் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றிலிருந்து இக்குழந்தையை யாரோ கொரியர் கவரில் வீசி எறிவதும், குழந்தை நடுரோட்டில் விழுவதும் தெரியவந்துள்ளது என உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இந்த சிசிடிவி காட்சிகளை அதிர்ச்சியடைந்த போலீசார், குழந்தையை வீசி எறிந்தவர்கள் யார் என்ற விசாரணையை மேற்கொண்டுள்ளனர். இருப்பினும் சம்பவம் நடந்ததாக சொல்லப்படும் அந்த அடுக்குமாடி குடியிருப்பில் யாரும் இல்லை என்றும், அது பல மாதங்களாக பூட்டி உள்ளது என்றும் கூறப்படுகிறது.
இதனால் குழப்பமடைந்த காவல்துறையினர், குழந்தையை யாராவது கொன்று பிறகு இங்கு கொண்டுவந்து போட்டு இருக்கலாமா அல்லது இங்கு வந்து தங்கி பிறகு குழந்தையை தூக்கிப்போட்டு இருக்கலாமா? என்று பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.
பிறந்து சில நாட்களே ஆன ஆண் குழந்தை இறந்திருப்பதும், நடுரோட்டில் அதன் சடலம் வீசப்பட்டதும் அப்பகுதியில் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது.