"அலோபதி மருத்துவர்கள் கடவுளின் தூதர்கள்!" - 'ட்விஸ்ட்' அடித்த பாபா ராம்தேவ்
அலோபதி மருத்துவர்கள் குறித்தும் அலோபதி மருத்துவம் குறித்தும் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய பாபா ராம்தேவ் தற்போது திடீர் பல்டி அடித்து பேசியுள்ளார்.
சில வாரங்கள் முன் தனியார் நிறுவன நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட பதஞ்சலி நிறுவனர் பாபா ராம்தேவ், ''இந்தியாவில் தற்போது கடைபிடிக்கப்பட்டு வரும் அலோபதி மருத்துவம் முட்டாள்தனமான ஒன்று. கொரோனா நோய்த் தொற்றில் இருந்து மக்களின் உயிரை காப்பதில் ரெம்டெசிவிர் உள்ளிட்ட மருந்துகள் தோல்வி கண்டுள்ளன.
அலோபதி மருந்துகளாலும், மருத்துவ முறைகளாலும் லட்சக்கணக்கான மக்களின் உயிர்களை இழந்ததுதான் மிச்சம். மருத்துவர்களே கொலையாளிகள். ஆகவே, அலோபதி முறையை முற்றிலும் நீக்கிவிட்டு இந்தியாவில் ஆயுர்வேத முறையை அமல்படுத்த வேண்டும்" என்று சர்ச்சைக்குரிய வகையில் அலோபதி மருத்துவம் குறித்து பேசினார்.
இவர் பேசிய வீடியோ காட்சிகள் வலைத்தளங்கள், மீடியாக்களில் வெளியாகி வைரலாக, இந்திய மருத்துவ சங்கம் கடும் கண்டனம் தெரிவித்தது. இந்த விவகாரத்தில் இந்திய மருத்துவ சங்கம் (IMA) ராம்தேவுக்கு நோட்டீஸ் அனுப்பி, அந்த நோட்டீஸில் 15 நாட்களுக்குள் பாபா ராம்தேவ் மன்னிப்பு கேட்க வேண்டும்; 1000 கோடி ரூபாய் இழப்பீடு தர வேண்டும் என கூறப்பட்டுள்ளது. மேலும், பதஞ்சலி நிறுவனம் மீதும் ராம்தேவ் மீதும் மருத்துவ சங்கம் மூலம் குற்றவியல் வழக்கு தாக்கல் செய்யப்படும் என்று அதிரடியாக அறிவித்தது.
மேலும், இந்த விவகாரத்தை பிரதமர் மோடி வரை எடுத்துச் சென்றது இந்திய மருத்துவ சங்கம். பின்பு, டெல்லி காவல்நிலையத்தில் பாபா ராம்தேவ் மீது வழக்கு தொடரப்பட்டது. ஆனால், அதை பற்றியெல்லாம் கவலைப்படாத பாபா ராம்தேவ், ''அவர்களின் தந்தையால் கூட என்னை கைது செய்ய முடியாது. அவர்கள் சும்மா சத்தம் போடுகிறார்கள். அவர்கள் அனைவரும் தக் ராம்தேவ், மகாதக் ராம்தேவ், கிராப்டர் ராம்தேவ் போன்ற ட்ரெண்ட்களை உருவாக்கிக்கொண்டே இருக்கிறார்கள்" என்று பேசினார்.
இந்த நிலையில், திடீர் ட்விஸ்ட்டாக, தற்போது தடுப்பூசி எடுத்துக் கொள்ளப்போவதாக அறிவித்துள்ளார். ஹரித்வாரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ''தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் மற்றும் யோகா மற்றும் ஆயுர்வேதம் மூலம் இரட்டை பாதுகாப்பையும் பெறுங்கள். இப்படி செய்வதால் கொரோனா காரணமாக ஒரு நபர் கூட இறக்கமாட்டார்.
மிக விரைவில் நானும் தடுப்பூசி எடுத்துக்கொள்வேன். ஜூன் 21 முதல் அனைவருக்கும் இலவச தடுப்பூசி குறித்த பிரதமர் நரேந்திர மோடியின் அறிவிப்பு வரலாற்று சிறப்பு மிக்க நடவடிக்கை. இந்த சமயத்தை பயன்படுத்தி அனைவரும் தடுப்பூசி எடுத்துக்கொள்ள வேண்டும்" என்றவர், ''இந்திய மருத்துவ சங்கத்துடன் (ஐ.எம்.ஏ) நடந்து வரும் மோதலில், எந்தவொரு அமைப்பிலும் எந்த விரோதமும் கொண்டிருக்க முடியாது.
நான் எந்த அமைப்புக்கும் எதிரானவன் அல்ல. நல்ல மருத்துவர்கள் ஒரு உண்மையான வரம். அவர்கள் பூமியில் உள்ள கடவுளின் தூதர்கள். ஆனால் தனிப்பட்ட மருத்துவர்கள் தவறான செயல்களைச் செய்ய முடியும். அவசர சிகிச்சை மற்றும் அறுவை சிகிச்சைக்கு வரும்போது, அலோபதி சிறந்தது. இதைப் பற்றி இரண்டு கருத்துக்கள் இருக்க முடியாது.
மருந்துகள் என்ற பெயரில் மக்களை சுரண்டுவதற்கு எதிராக தான் நான் பேசினேன். பல மருத்துவர்களிடையே பொதுவான மருந்துகளுக்கு பதிலாக விலையுயர்ந்த மருந்துகளை பரிந்துரைக்கும் போக்கு இருப்பதால், மிகவும் மலிவான விலையுள்ள மருந்துகளை வழங்கும் பிரதான் மந்திரி ஜான் ஆஷாதி கேந்திரங்கள் திறக்கப்பட வேண்டும்" என்று பேசினார்.