அயோத்தி வழக்கு : கடைசி 40 நாட்கள் நடந்த காரசார வாதங்கள்

அயோத்தி வழக்கு : கடைசி 40 நாட்கள் நடந்த காரசார வாதங்கள்
அயோத்தி வழக்கு : கடைசி 40 நாட்கள் நடந்த காரசார வாதங்கள்
Published on

அயோத்தி வழக்கு விசாரணையில் கடைசி 40 நாட்களாக உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்ற காரசார வாதங்களை காண்போம்.

அயோத்தி வழக்கு விசாரணையில் முதல்கட்ட வாதங்களை வைத்த நிர்மோகி அக்காரா அமைப்பு, சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பான ஆவணங்கள் 1982ம் ஆண்டு திருடு போய்விட்டதாக தெரிவித்தது பரபரப்பை ஏற்படுத்தியது. பாபர் மசூதி கட்டும் முன் அங்கு இருந்த ராமர் கோவிலில் இருந்து சில சிலைகளை மீட்டதாக குறிப்பிடும் இந்து அமைப்புகள், அவற்றின் வயதை கணிக்கும் அறிவியல் ரீதியிலான ஆய்வுகளை செய்தனவா. அப்படி செய்திருந்தால் இந்த விஷயம் எளிதாக முடிந்திருக்குமே என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அத்தகைய ஆய்வுகள் எதையும் செய்யவில்லை எனக் கூறிய ராம் லல்லா அமைப்பு, இது முழுக்க முழுக்க நம்பிக்கை சார்ந்த விஷயம் என வாதிட்டது. 350 ஆண்டுகளுக்கு முன்பாக முகலாயர்கள் ராமர் கோவிலை இடித்துவிட்டு அங்கு பாபர் மசூதியை கட்டினார்கள் என்றும் அதன் பிறகு அவர்கள் அங்கு வழிபட்டதாலேயே அந்த இடம் முஸ்லிம்களுக்கு சொந்தமானதாக மாறிவிடாது என்றும் இந்து அமைப்புகள் வாதிட்டன.

ஒரு கோவிலின் இடிபாடுகளின் மீது பாபர் மசூதி கட்டப்பட்டு இருந்ததற்கான புகைப்படங்களை தாக்கல் செய்த இந்து அமைப்புகள், இப்படி மற்றொரு மத வழிபாட்டு பகுதியில் மசூதி கட்டப்பட்டால் அதை வழிபாட்டுத்தலமாக எடுத்துக்கொள்ள முடியாது என இஸ்லாமியர்களின் சட்டமே சொல்வதாக வாதிட்டன. மேலும் 1950ஆம் ஆண்டு ஃபைசாபாத் ஆணையராக இருந்தவர் பாபர் மசூதி இருந்த இடத்தில் இந்து கடவுள்கள் மற்றும் சின்னங்களுடன் 14 தூண்கள் இருந்ததை சுட்டிக் காட்டியிருப்பதாக வாதம் வைக்கப்பட்டது. இவ்வாறு இந்து அமைப்புகள் சார்பில் 15 நாட்கள் வாதங்கள் வைக்கப்பட்ட நிலையில் அடுத்து இஸ்லாமிய அமைப்புகள் சார்பில் வாதங்கள் வைக்கப்பட்டன. 

அயோத்தியில் கோவில் இருந்ததற்கான எந்த ஆதாரமும் இல்லை என இஸ்லாமிய அமைப்புகள் தெரிவித்தன. மசூதி இருந்த இடத்தில் ஒரு தூணில் ஒரு மயிலும் தாமரையும் பொறிக்கப்பட்டு இருந்ததால் அது இந்து கோவில் என கூறுகிறார்கள் என்றும் அதை ஆதாரமாக எடுத்துக்கொள்ளக் கூடாது என சன்னி வக்ஃப் வாரிய வழக்கறிஞர் ராஜிவ் தவான் வாதிட்டார். 1934இல் மசூதியை சிலர் சேதப்படுத்தினர் என்றும் பின்னர் 1947ல மீண்டும் சிலர் பாபர் மசூதிக்குள் நுழைந்து சிலைகளை வைத்து வழிபட்டதற்கான ஆதாரங்கள் மிக வலுவாக இருக்கின்றன என்றும் இஸ்லாமிய தரப்பு வாதிட்டது. இதற்கிடையில் கடந்த செப்டம்பர் 5ம் தேதி இஸ்லாமிய தரப்பில் மிக முக்கியமான கருத்து ஒன்று முன் வைக்கப்பட்டது.

அதில் சர்ச்சைக்குரிய இடத்தில் எந்தவிதமான பிரச்சினையும் இல்லாமல் இந்து இஸ்லாமியர்கள் என இரண்டு தரப்பினரும் சேர்ந்தே வழிபாடு நடத்தலாம் என தெரிவிக்கப்பட்டது. பாபர் மசூதியை மீண்டும் எழுப்புவதுடன் மசூதிக்கு வெளியே இந்துக்கள் கோவில்களை கட்டி அவர்கள் மத முறைப்படி வழிபாடுகளை நடத்திக் கொள்ளட்டும் என்றும் ஆனால் அந்த இடம் தங்களுக்கு சொந்தமானது என்று தீர்ப்பு வழங்க வேண்டும் என இஸ்லாமியர்கள் தரப்பில் வாதங்கள் வைக்கப்பட்டன. மசூதி இருக்கக்கூடிய பகுதியில் வேறு ஒரு மதத்தினர் வழிபட இஸ்லாமிய மத சட்டங்கள் அனுமதி வழங்குகின்றனவா என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இஸ்லாமிய மத சட்டங்கள் மிக முக்கியமானவைதான் என்ற போதிலும் அவற்றை யாருக்கும் பாதகமில்லாமல் பயன்படுத்த வேண்டும் என்பதையும் ஆராய வேண்டியுள்ளது என்று வாதம் வைக்கப்பட்டது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com