பிராண பிரதிஷ்டை
அயோத்தியின் மூலவரான குழந்தை ராமனின் சிலை, பிரதமர் மோடி முன்னிலையில் இன்று பகல் 12:20க்கு பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது. இந்த பிராண பிரதிஷ்டை விழாவானது, ஒரு மணிக்கு நிறைவடைய உள்ளது. புண்ணிய தீர்த்தங்கள் கொண்டு கோயில் கருவறை தூய்மைப்படுத்தப்பட்டு பிரதிஷ்டை நடைபெற இருக்கிறது. கருவறையில் பிரதிஷ்டை செய்யப்பட உள்ள ஒரு அங்குல குழந்தை ராமர் சிலையை கர்நாடகாவின் புகழ்பெற்ற சிற்பி அருண் யோகிராஜ் நுணுக்கமாக செதுக்கி வடிவமைத்துள்ளார்.
பாதுகாப்பு:
அயோத்தி நகர் ராமர் கோவில் திறப்பையொட்டி அயோத்தி ராம் நகரம் விழாகோலம் கொண்டுள்ளது. ராமர் கோவில் விழாவில் பங்கேற்க பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட முக்கிய பிரமுகர்களுக்கு அழைப்பு விடுவிக்கப்பட்டுள்ளது. அரசியல் தலைவர்கள், திரை மற்றும் விளையாட்டு துறை பிரபலங்கள் என பலரும் இவ்விழாவில் பங்கேற்க உள்ளனர். ஆங்காங்கே அமைக்கப்பட்டுள்ள கலையம்சம் கொண்ட அலங்கார வளைவுகள் காண்போரை கவர்கின்றன. வில் அம்பு வடிவங்கள், கண் கவர் ராமனின் திருவுருவ படங்கள், பதாகைகளும் அயோத்தியை அலங்கரிக்கிறது. ராமர் கோவில் திறப்பு நடைபெற உள்ள நிலையில் அயோத்தியில் மூன்று அடுக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. எஸ்பிஜி (Special Protection Group), தீவிரவாத தடுப்பு படை, சிறப்பு கமாண்டர் படை, ஏஐ தொழில்நுட்பத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட கேமராக்கள் பொருத்தி அயோத்தி கண்காணிக்கப்பட்டு வருகிறது.
கோவில் கட்டுமானம்:
உத்தரப்பிரதேசம் அயோத்தியில் கட்டப்பட்டுள்ள இராமர் கோயிலானது 1800 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ளது. 70 ஏக்கரில் 70 சதவீத நிலம் பசுமையானதாக உள்ளது. 7 ஏக்கர் மட்டுமே கோயிலாக வடிவமைக்கப்பட்டுள்ளது. ராமர் கோயில் மூன்று அடுக்குகளைக் கொண்டது, ஒவ்வொரு தளமும் 20 அடி உயரம் கொண்டது. மொத்தம் 392 தூண்கள் மற்றும் 44 கதவுகள் கொண்டது. முதல் தளத்தில், ஸ்ரீ ராம் தர்பார் இருக்கும்.
கிழக்கு, மேற்கில் 380 அடி நீளம் - 250 அகலம் - 121 அடி உயரம் என அடுக்கடுக்கான கோபுரத்துடன் நாகரா கட்டடக்கலையில் கோவிலானது வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த கோவிலில் 392 தூண்கள் 44 கதவுகளும் வைக்கப்பட்டுள்ளன. கதவுகள் அனைத்தும் தேக்கால் செய்யப்பட்டுள்ளது. தூண்கள் அணைத்திலும் பல்வேறு விதமான சிலைகள் நுணுக்கமாக வடிவமைக்கப்பட்டுள்ளன. 14 அடி அகலமும் 732 அடி நீளமும் கொண்டு செவ்வகவடிவில், மூன்று தலங்கள் மற்றும் ரங் மண்டபம், நித்திய மண்டபம், சபா மண்டபம், கீர்த்தனை மண்டபம், பிரார்த்தனை மண்டபம் என ஐந்து மண்டபங்கள் உள்ளன. பிரதான வாயிற்கதவில் சிங்கஉருவமும் யானை உருவமும் பொறிக்கப்பட்டுள்ளது. சிங் நுழைவு வாயிலில் 32 படிக்கட்டுகள் உள்ளது. இதில் ஏறி கருவறை செல்லலாம்.
கர்நாடகா, தெலங்கானா மாநிலங்களிலிருந்து வரவழைக்கப்பட்ட கிரானைட் கல் போன்றவற்றை கொண்டு இன்டர்லாக்கிங் முறையில் கோயிலை கட்டி உள்ளனர். இதில் இரும்பு பயன்படுத்தவில்லை. சுண்ணாம்பு, சிமெண்ட் போன்றவையும் பயன்படுத்தவில்லை என்பது கூடுதல் தகவல்.
கோவிலில் இருக்கும் விக்ரஹங்கள் அனைத்தும் நேபாளத்தில் உள்ள கண்டடி ஆற்றில் கிடைக்கும் சாலக்ராம கற்களைக்கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. இப்படியாக இந்திய பாரம்பரிய கட்டடக்கலைக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக அயோத்திய ராமர் கோவில் திகழ்கிறது.