அயோத்தி விவகாரத்தில் மத்தியஸ்தர்கள் கைவிரித்த நிலையில் தினம் தோறும் தொடர் விசாரணைக்கு வழக்கை கொண்டு செல்ல வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அயோத்தியில் குறிப்பிட்ட பகுதியை இந்து அமைப்புகளும் இஸ்லாமிய அமைப்புகளும் சொந்தம் கொண்டாடி வந்தன. இதன் தொடர்ச்சியக 1992ம் ஆண்டு அயோத்தியி்ல் வலதுசாரி அமைப்புகளால் பாபர் மசூதி இடிக்கப்பட்டது. இதையடுத்து அயோத்தி விவகாரம் தொடர்பான வழக்குகளில் அலகாபாத் உயர் நீதிமன்றம் கடந்த 2010ஆம் ஆண்டு தீர்ப்பு வழங்கியது. இதில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தை 3 பாகங்களாக பிரித்து ராம் லல்லா, நிர்மோகி அக்காரா, சன்னி வக்ஃப் வாரியம் ஆகிய 3 அமைப்புகளுக்கு வழங்கி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதைத் தொடர்ந்து இத்தீர்ப்பை எதிர்த்து 14 மேல்முறையீட்டு வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. இதை விசாரித்த உச்ச நீதிமன்றம் இவ்விவகாரம் அரசியல் ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த இவ்வழக்கில் முதலில் சமரசமாக தீர்வு காண வேண்டும் என தெரிவித்தது. சம்மந்தப்பட்ட தரப்புகளுடன் பேசி முடிவு காண 3 பேர் கொண்ட குழுவையும் கடந்த மார்ச் 8ஆம் தேதி உச்ச நீதிமன்றம் நியமித்திருந்தது
உச்ச நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி இப்ராகிம் கலிஃபுல்லா தலைமையில் ஆன்மிக குரு ஸ்ரீஸ்ரீரவிசங்கர், வழக்கறிஞர் ஸ்ரீராம் பஞ்சு ஆகிய 3 பேர் கொண்ட குழு கடந்த 5 மாதங்களாக சம்பந்தப்பட்ட தரப்புகள் மத்தியில் சமரசப் பேச்சுகள் நடத்தி வந்தது. இப்பேச்சுவார்த்தை விவரங்கள், எட்டப்பட்ட முடிவுகள் குறித்த அறிக்கை சீலிடப்பட்ட உறையில் வைத்து உச்ச நீதிமன்றத்திடம் நேற்று வழங்கியது. மேலும் அயோத்தி விவகாரத்தில் சரியான தீர்வை எட்டமுடியவில்லை எனவும் மத்தியஸ்தர்கள் கைவிரித்தனர்.
இந்நிலையில் மத்தியஸ்தர்களின் அறிக்கை திருப்தி அளிக்காத பட்சத்தில் தினம் தோறும் தொடர் விசாரணைக்கு அயோத்தி வழக்கு நகரும் என தகவல் வெளியாகியுள்ளது. இன்று அயோத்தி வழக்கு மீண்டும் விசாரணைக்கு வரவுள்ளது.