அயோத்தி வழக்கு: இன்று மாலை விசாரணை நிறைவு

அயோத்தி வழக்கு: இன்று மாலை விசாரணை நிறைவு
அயோத்தி வழக்கு: இன்று மாலை விசாரணை நிறைவு
Published on

அயோத்தி வழக்கு மீதான விசாரணை இன்று மாலையுடன் நிறைவுப் பெறுவதாக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தெரிவித்துள்ளார்.

அயோத்தியில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலம் யாருக்கு சொந்தம் என்று பிரச்சனைக்கு முடிவு காண பல ஆண்டுகளாகவே உச்சநீதிமன்றம் தீவிரம் காட்டியது. பல்வேறு கட்ட விசாரணைகளுக்குப் பின்னர் கடந்த மார்ச் மாதம் 8-ஆம் தேதி முன்னாள் நீதிபதி கலிஃபுல்லா தலைமையில் மத்தியஸ்தர் குழு அமைக்கப்பட்டது. ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர், வழக்கறிஞர் ஸ்ரீராம் பஞ்சு ஆகியோர் இந்த குழுவில் இடம்பெற்றனர். 

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்த சமரசம் தோல்வியில் முடிந்தது. இதையடுத்து வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது. அயோத்தி வழக்கு தொடர்பான 14 மேல்முறையீட்டு மனுக்கள், மற்றும் புதிய மனு ஆகியவற்றின் மீதான விசாரணை நடந்து வருகிறது. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் நீதிபதிகள் டி.ஒய் சந்திரசூட், அப்துல் நசீர், அசோக் பூஷன், போப்டி ஆகியோர் இந்த வழக்கை விசாரித்து வருகின்றனர்.

அயோத்தி வழக்கை தினமும் விசாரிக்க வேண்டும் என தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தெரிவித்திருந்த நிலையில் விடுமுறை தவிர்த்து மற்ற அனைத்து நாட்களும் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டது. பல்வேறு புதிய ஆதாரங்கள், வாதங்கள் இந்த வழக்கில் சமர்ப்பிக்கப்பட்டன. இந்த நிலையில் அயோத்தி வழக்கு 40-ஆவது நாளாக இன்றுடன் நிறைவு பெறும் என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தெரிவித்துள்ளார். அடுத்த மாதம் 17-ஆம் தேதி தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் ஓய்வு பெற இருப்பதால் அதற்குள் அயோத்தி வழக்கில் தீர்ப்பு வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இ‌தனிடையே அயோத்தி வழக்கு நிறைவு பெற இருப்பதை தொடர்ந்து மதரீதியிலான மோதல்கள் ஏற்படாமல் தடுக்க மாநிலங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. உள்துறை அமைச்சகம் மூலம் தமிழகம், தெலங்கானா, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கு ரகசிய எச்சரிக்கை அனுப்பப்பட்டிருப்பதாக மத்திய அரசின் மூத்த அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். ஏற்கெனவே அயோத்தியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கும் நிலையில் மாநிலங்களிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com