அயன் பட பாணியில் துபாயில் இருந்து தங்கத்தை விக்கில் மறைத்து கடத்தி வந்த இளைஞரை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.
ஐக்கிய அரபு அமீரகத்தின் (யுஏஇ) தலைநகரான அபுதாபியில் இருந்து டெல்லிக்கு வரும் விமானத்தில் தங்கம் கடத்தி வரப்படுவதாக சுங்கத் துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில், டெல்லி விமான நிலையத்துக்கு அபுதாபியில் இருந்து வரும் பயணிகளிடம் தீவிர சோதனை நடத்தப்பட்டது. ஆனால், அவர்களிடம் எந்தவொரு கடத்தல் தங்கமும் இல்லை. இதனால் குழப்பம் அடைந்த சுங்கத்துறையினர், பயணிகளின் நடவடிக்கையை கண்காணித்தனர்.
அப்போது ஒரு பயணியின் செயல்பாடுகள் சந்தேகத்துக்கிடமாக இருந்தது. இதையடுத்து, அவரை தனியே அழைத்துச் சென்று போலீஸார் விசாரணை நடத்தினர். இதில் அவரது தலையில் விக் அணிந்திருப்பதும், அதற்குள் தங்கத்தை மறைத்து வைத்திருப்பதும் தெரியவந்தது. மேலும், ஆசனவாயிலும் தங்கத்தை மறைத்துக் கொண்டு வந்திருப்பதை அவர் ஒப்புக் கொண்டார். இதன் தொடர்ச்சியாக, விக்கிலும், ஆசனவாயிலும் இருந்த தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். 630.45 கிராம் எடைக்கொண்ட அந்த தங்கத்தின் மதிப்பு ரூ.30 லட்சம் இருக்கும் எனக் கூறப்படுகிறது. தங்கம் கடத்தி வந்த நபரை சுங்கத்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.