ஆன்லைன் சூதாட்ட விளம்பரங்களை தொலைக்காட்சிகள் மற்றும் ஓடிடி தள நிறுவனங்கள், செய்தி இணையதளங்கள் மற்றும் பிற இணையதளங்கள் தவிர்க்குமாறு மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது.
இது தொடர்பாக மத்திய தகவல் ஒளிபரப்புத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவுரை அறிக்கையில், நாடு முழுவதும் பல மாநிலங்களில் ஆன்லைன் சூதாட்டங்கள் தடை செய்யப்பட்டுள்ளது. இதை கவனத்தில் கொண்டும் இளைஞர்கள் குழந்தைகள் அதிக அளவில் இத்தகைய ஆன்லைன் சூதாட்டங்களால் பாதிக்கப்படுவதை மனதில் கொண்டும் ஆன்லைன் சூதாட்ட விளம்பரங்களை பயன்படுத்துவதை தவிர்க்குமாறு கேட்டுக் கொண்டுள்ளது.
இந்தியாவில் சூதாட்டம் என்பது பல பகுதிகளில் தடை செய்யப்பட்டது என்பதன் காரணமாக அதனை ஊக்குவிக்கும் வகையிலான விளம்பரங்களை பயன்படுத்துவது என்பதும் தடை செய்யப்பட்டதாக மத்திய அரசு விளக்கியுள்ளது.
இந்தியாவில் தமிழகம், கர்நாடகா உள்ளிட்ட பல மாநிலங்களில் ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளுக்கு தடை செய்து இது தொடர்பான வழக்குகளும் சம்பந்தப்பட்ட உயர் நீதிமன்றங்கள் மற்றும் உச்ச நீதிமன்றத்தில் நிலுவைலிருந்து வருவது குறிப்பிடத்தக்கது.