கேரள மாநிலம் ஆலப்புழாவில் மீண்டும் பறவைக் காய்ச்சல் பரவியதை தொடர்ந்து 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாத்துகளை கொல்ல கேரள அரசு முடிவு செய்துள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன்பு கேரளாவின் ஆலப்புழா மாவட்டம் ஹரிப்பாடு அருகே உள்ள சில பண்ணைகளில் வளர்க்கப்பட்ட 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாத்துக்கள் இறந்தன. இறந்த வாத்துக்களின் ரத்த மாதிரியை எடுத்து பரிசோதனைக்காக பூனாவில் உள்ள பரிசோதனைக் கூடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. பரிசோதனையின் முடிவில் ஏவியன் புளூ எனப்படும் பறவை காய்ச்சல் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது.
இதனையடுத்து ஆலப்புழா மாவட்ட கலெக்டர் கிருஷ்ண தேஜா தலைமையில் சுகாதார துறை அதிகாரிகளின் அவசர கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், இந்த வைரஸ் மனிதர்களுக்கும் பரவாமல் இருப்பதற்காக, நோய் பாதிப்பு கண்டறியப்பட்ட பண்ணைகளிலிருந்து சுமார் 1 கிலோ மீட்டர் சுற்றளவில் உள்ள அனைத்து பண்ணைகளில் வளர்க்கப்படும் பறவைகளையும் உடனடியாக கொல்ல உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி சுமார் 20,471 வாத்துக்கள், கோழிகள் கொல்லப்பட உள்ளன.
கேரள மாநிலத்தில் வாத்து பண்னைகளில் வளர்க்கப்படும் வாத்துகளுக்கு அடிக்கடி பறவைக் காய்ச்சல் நோய் பரவுவதும், இந்த ஏவியன் புளூ வைரஸ் இது மனிதர்களுக்கும் பரவாமல் இருப்பதற்காக சுற்றியுள்ள பகுதிகளிலிருக்கும் பறவைகள் உடனடியாக கொல்லப்படுவதும் வழக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.