ஆட்டிசம் இதை தமிழில் மதியிறுக்கம் என்பர். ஆட்டிசம் குறைபாடுடைய குழந்தைகளுக்கு உடலில் வெளிப்படையான எந்த பாதிப்பும் இருக்காது. இவர்களின் நடத்தையை உற்று கவனித்தால் மட்டுமே அவர்களின் குறைபாடுகளைப் புரிந்து கொள்ள முடியும். இத்தகைய ஆட்டிசம் பாதித்த சிறுவன் ஒருவர் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் தலைமன்னாரிலிருந்து தனுஷ்கோடி வரை கடலை நீந்திக்கடந்து சிறுவன் ஒருவர் சாதனை புரிந்துள்ளார்.
மனம் நினைந்தால் மலையும் கடுகே...
சென்னை துரைப்பாக்கம் பகுதியை சேர்ந்த கிருஷ்ணகுமார், ஐஸ்வர்யா தம்பதியினரின் மகன் லக்ஷய். இவருக்கு ஆட்டிசம் பாதிப்பு இருந்தாலும் நீச்சலில் அசாத்தியமான சாதனைகளை நிகழ்த்துகிறார். இந்நிலையில், ஆட்டிசம் பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்த நினைத்து, இலங்கையிலுள்ள தலைமன்னாரிருந்து ராமேஸ்வரம் வரையிலான 50 கிலோ மீட்டர் தொலைவுக்கொண்ட பாக்ஜலசந்தியை நீந்தி சாதனை புரிந்துள்ளார்.
இதற்காக, இந்திய வெளியுறவுதுறை, இலங்கை தூதரகம் மற்றும் பாதுகாப்புதுறை அமைச்சகத்திடமும் அனுமதி கோரியிருந்தனர் இவரது பெற்றோர்கள். இதற்கான அனுமதி கிடைக்கப்பெற்ற நிலையில், ராமேஸ்வரம் மீன்பிடித்துறைமுகத்திலிருந்து இரண்டு படகுகளில் லக்ஷய் , அவரது பெற்றோர், பயிற்சியாளர்கள் சதீஷ், செல்வம், ஒருங்கிணைப்பாளர் ரோஜர், மருத்துவக் குழு, மீனவர்கள் உள்ளிட்ட 22 பேர் தலைமன்னாருக்கு புறப்பட்டுச் சென்றனர்.
கடந்த 8ஆம் தேதி அதாவது செவ்வாய்கிழமை மாலை 5:05 மணியளவில் தலைமன்னாரிலிருந்து லக்ஷய் நீந்தத் துவங்க, சில மணி நேரத்தில் கடும் மழைப்பெய்யவே நீச்சலானது தடைப்பட்டது. மழை நின்றதும் மீண்டும் தனது முயற்சியினை ஆரம்பித்து கடலில் நீந்த ஆரம்பித்தார். கரையில் உள்ளவர்கள். லக்ஷய்... லக்ஷய்... என கரையில் கரகோஷம் எழுப்பி உற்சாகப்படுத்த கடலில் நீந்திய லஷய், புதன்கிழமை பிற்பகல் மூன்றரை மணியளவில் ராமேஸ்வரம் அக்னி தீர்த்தம் கடற்பகுதியை வந்தடைந்தார்.
தொடர்ந்து 22 மணிநேரம் 35 நிமிடங்களில் சுமார் 50 கிலோ மீட்டர் தூரம் வரை நீந்தி உள்ளார். இதன் மூலம் ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்டவர், கடலில் அதிக தூரமும், அதிக நேரமும் தனியாக நீந்திய சாதனையை லக்ஷய் படைத்துள்ளார். ராமேஸ்வரம் அக்னி தீர்த்தக் கடற்கரையில் லக்ஷய்க்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.