ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரரும், சுழற்பந்து வீச்சில் தனி முத்திரை பதித்தவருமான ஷேன் வார்னே, கடந்த ஆண்டு மார்ச் 4ஆம் தேதி, தாய்லாந்தில் அவரது பங்களாவில் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார் என தகவல் வெளியானது. அவருடைய மறைவுக்கு கிரிக்கெட் பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்திருந்தனர்.
இந்த நிலையில், ”ஷேன் வார்னே மரணம், கோவிட் எம்.ஆர்.என்.ஏ. தடுப்பூசியுடன் தொடர்புடையது” என இங்கிலாந்தைச் சேர்ந்த இந்திய வம்சாவளி இருதய நோய் நிபுணரும் ஆஸ்திரேலிய மருத்துவருமான அசீம் மல்கோத்ரா தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலிய மருத்துவ வல்லுநர்கள் சங்கத்தின் (AMPS) தலைவரான மருத்துவர் கிறிஸ் நீல் மற்றும் மருத்துவர் அசீம் மல்ஹோத்ரா ஆகியோர் ஷேன் வார்னேவின் பிரேத பரிசோதனை முடிவுகளை ஆய்வு செய்ததில் அவருக்கு இதய நோய் இருந்ததாகத் தெரிய வந்துள்ளது.
அவர்களது ஆய்வின் முடிவில், ”ஏற்கனவே கண்டறியப்படாத லேசான இதய நோய் உள்ளவர்களுக்கு, ஒரு கோவிட் எம்.ஆர்.என்.ஏ. தடுப்பூசியானது, அவர்களின் உடல்நிலையில் விரைவான முடுக்கத்தை ஏற்படுத்தக்கூடும்” எனத் தெரிய வந்துள்ளது. இதை, ஷேன் வார்னே, கோவிட் எம்.ஆர்.என்.ஏ. தடுப்பூசி செலுத்திக் கொண்டதற்குப் பிறகான ஆய்வுகள் குறித்து மருத்துவர் மல்கோத்ரா சுட்டிக்காட்டுகிறார்.
அதிலும் "சர்வதேச முன்னாள் விளையாட்டு வீரர்கள், இவ்வளவு இளம் வயதில் (52) திடீரென மாரடைப்பால் மரணம் அடைவது மிகவும் அசாதாரணமானது" என்கிறார், மல்கோத்ரா. “அதே நேரத்தில், ஷேன் வார்னே சமீபத்திய ஆண்டுகளில் அதிக எடை கொண்டவராகவும் இருந்துள்ளார். மேலும் அவர் அதிகமாய் புகைப் பழக்கத்தையும் மேற்கொண்டிருக்கிறார். இத்தகைய செயல்களால், அவர் ஆரோக்கியமான வாழ்க்கை முறையைக் கொண்டிருக்கவில்லை என்பதையும் நாங்கள் அறிவோம். அவரது தமனிகளில் சில லேசான பாதிப்புகள் இருந்தன. என்றாலும் அவர் இரண்டு டோஸ் தடுப்பூசிகளைச் செலுத்தியபிறகு வேகமாக முன்னேறினார்” எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர், ”ஆஸ்திரேலியா உட்பட உலகெங்கிலும் காணப்படும் அதிக மரணங்களுக்கு கோவிட் எம்.ஆர்.என்.ஏ. தடுப்பூசிகள் முக்கிய காரணம் என்பதில் எனக்கு சந்தேகம் இல்லை. இதுதொடர்பான விசாரணை நிலுவையில் உள்ள நிலையில், உலகம் முழுவதும் அவற்றின் பயன்பாடு உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.