“பாஜக ஆட்சியில் ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை முறைகேடு?” - சர்ச்சை கிளப்பும் சிஏஜி

“பாஜக ஆட்சியில் ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை முறைகேடு?” - சர்ச்சை கிளப்பும் சிஏஜி
“பாஜக ஆட்சியில் ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை முறைகேடு?” - சர்ச்சை கிளப்பும் சிஏஜி
Published on

சரியான முறையில் மேற்கொள்ளப்படாத ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டினால் அரசுக்கு ரூ560 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக சிஏஜி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. 

காங்கிரஸ் ஆட்சியில் 2008இல் மேற்கொள்ளப்பட்ட 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு விவகாரம் இந்திய அளவில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி அரசுக்கு வருமான இழப்பு என்று கூறப்பட்டது. 2014 மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு பெரிய பின்னடைவு ஏற்படவும் இந்த விவகாரம் முக்கிய காரணமாக அமைந்தது. 

முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்பதன் அடிப்படையில் இந்த ஒதுக்கீடு செய்யப்பட்டது. சட்டவிரோதமாக அலைக்கற்றை ஒதுக்கீடு செய்யப்பட்டதாக புகார் எழுந்து, சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கும் நடைபெற்றது. மத்திய தொலைத் தொடர்பு அமைச்சராக இருந்த ஆ.ராசா தனது பதவியை இழந்ததோடு, சிறைக்கும் செல்ல நேர்ந்தது. நீண்ட காலம்  நடைபெற்ற இந்த வழக்கில், போதிய ஆதாரங்கள் இல்லையெனக் கூறி குற்றம்சாட்டப்பட்ட கனிமொழி உட்பட அனைவரையும் 2017 டிசம்பரில் சிபிஐ சிறப்பு நீதிமன்றம் விடுவித்தது.

இந்நிலையில், பாஜக ஆட்சியின் 2018 ஆண்டிற்கான அறிக்கையை நாடாளுமன்றத்தில் நேற்று சிஏஐ தாக்கல் செய்துள்ளது. அதில், பாஜக தலைமையிலான அரசு மீது பல்வேறு விமர்சங்களை சிஏஜி முன் வைத்துள்ளது. குறிப்பாக, 2014ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீடு சரிவர மேற்கொள்ளப்படாததால் அரசுக்கு ரூ560 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. 

சிஏஜி தனது அறிக்கையில், “தொலைத் தொடர்பு துறையால் 2010 முதல் மைக்ரோவேவ் அலைக்கற்றை ஒதுக்கீடு செய்யப்பட்டு வந்தது. 2015 டிசம்பரில் ஒரே ஒரு விண்ணப்பம் மட்டும் ஏற்றுக் கொள்ளப்பட்டது. மைக்ரோவேவ் ஒதுக்கீட்டில் 2016 வரை 101 விண்ணங்கள் கிடப்பில் போடப்பட்டன. தொலைத் தொடர்பு துறையால் மேற்கொள்ளப்பட்ட இந்த நிர்வாக குறைபாடான அலைக்கற்றை ஒதுக்கீட்டினால் அரசுக்கு ரூ560 கோடி இழப்பீடு ஏற்றப்பட்டது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.   

மேலும், சிஏஜி அறிக்கையில், ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடுகளை கண்காணிப்பதற்காக மத்திய தொலைத் தொடர்புத் துறையால் 2012இல் அமைக்கப்பட்ட கமிட்டி தெரிவித்துள்ள பல்வேறு விஷயங்களை சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. ‘மைக்ரோவேவ் பேண்ட் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு அனைத்தும் ஏலத்தின் மூலம் நடைபெற்றிருக்க வேண்டும். அதுதான் சந்தை தொடர்பாக நடைமுறை. ஆனால், முதலில் வருபவர்களுக்கே முன்னுரிமை என்ற அடிப்படையில் இந்த ஒதுக்கீடுகள் செய்யப்பட்டுள்ளன. 2008-09 ஆண்டுகளில் 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் மேற்கொள்ளப்பட்டதை போன்றே இதுவும் செய்யப்பட்டுள்ளன’ என்று கமிட்டி தெரிவித்துள்ளது.

மேலும், ஸ்பெக்ட்ரம் கட்டணங்களை தொலைத் தொடர்பு துறை பழைய நடைமுறையிலேயே தொகையை வசூல் செய்துள்ளது எனவும், ஆகவே அரசுக்கு வருவாயில் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், “2015 ஆம் ஆண்டு ஜனவரி 21ம் தேதி பாதுகாப்பு சிறப்பு மண்டலங்கள் மற்றும் பாதுகாப்பு அலைவரிசை வழங்குவதற்கான இசைவுக்கு மத்திய அமைச்சரவை அனுமதி வழங்கியது. இதிலும், நிறைய குறைபாடுகள் இருந்ததால் அரசுக்கு இழப்பு ஏற்படுத்தியுள்ளது. 

அத்துடன் ஸ்பெக்ட்ரம் கட்டணங்களை தள்ளுபடி செய்ய பரிந்துரைக்குமாறு அமைச்சரவைக்கு பாதுகாப்புத்துறை சார்பில் முன்மொழியப்பட்டுள்ளது. ஆனால், பாதுகாப்புத்துறைக்கான ஸ்பெக்ட்ரம் கட்டணங்கள் தள்ளுபடி செய்யப்பட்டதற்கான எந்த ஒப்புதலையும் இதுநாள் வரை அமைச்சரவை வழங்கவில்லை. இவ்வாறு தொடர்ந்து பாதுகாப்புத்துறை இந்த அலைக்கற்றையை பயன்படுத்தி வந்ததால் ஒட்டுமொத்த நாட்டிற்குமான பயன்பாடு பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளது.” என்று சிஏஜி விளக்கியுள்ளது.  

முதலில் விண்ணப்பிப்பவர்களுக்கு ஒதுக்கீடு செய்வது தவறானது என்று கூறி 2012ம் ஆண்டு 122 நிறுவனங்களுக்கான அனுமதியை உச்சநீதிமன்றம் ரத்து செய்தது குறிப்பிடத்தக்கது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com