பாபர் மசூதி தொடர்பாக உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு குறித்து விமர்சனம் செய்த பாலிவுட் நடிகை ஸ்வரா பாஸ்கர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்போவதில்லை என்று மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் கே.கே.வேணுகோபால் தெரிவித்துள்ளார்.
அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவது தொடர்பான தீர்ப்பை உச்சநீதிமன்றம் வழங்கியது. பலரும் இந்தத் தீர்ப்புக்கு வரவேற்பு தெரிவித்தனர். சிலர் நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராகவும் கருத்துகளை தெரிவித்தனர். எப்போது சர்ச்சைக்குள்ளான கருத்துகளை தெரிவிக்கும் பழக்கமுடையவர் பாலிவுட் நடிகை ஸ்வரா பாஸ்கர். தனியார் நிகழ்ச்சியொன்றில் பங்கேற்றபோது ராமர் கோயில் தீர்ப்பு தொடர்பாக உச்சநீதிமன்றத்தை தரக்குறைவாக பேசியதாக புகார் எழுந்தது.
பலரும் ஸ்வரா பாஸ்கர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட வேண்டும் என கோரிக்கை எழுந்தது. இது குறித்து கருத்து தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ள கே.கே.வேணுகோபால் "என்னுடைய நிலைப்பாட்டில் அவரின் கருத்து ஒன்றும் கிரிமினல் குற்றமல்ல. எனவே அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கோ நடவடிக்கையோ தேவையில்லை. உச்சநீதிமன்றம்தான் பாபர் மசூதி இடித்ததற்கு சட்டத்துக்கு புறம்பானது என்று தன்னுடைய தீர்ப்பிலேயே குறிப்பிட்டுள்ளது" என கூறியுள்ளார்.