மகாராஷ்டிரா: தனிமைப்படுத்தப்பட்ட மையத்தில் பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை
மகாராஷ்டிராவில் தனிமைப்படுத்தப்பட்ட மையத்தில் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாக உதவியாளரை போலீசார் கைது செய்தனர்.
மாகாராஷ்டிரா மாநிலம் தானே, மிரா சாலையில் கொரோனா தனிமைப்படுத்துதல் மையம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக 11 வயது சிறுமி அனுமதிக்கப்பட்டிருந்தார். அவரை கவனித்துக்கொள்ள அந்த சிறுமியின் உறவுக்காரப் பெண்(20) அந்த மையத்தில் தங்கியிருந்தார். அவருடன் அவரது 10 வயது மகளும் தங்கியிருந்தார்.
அப்போது அங்கு உதவியாளராக இருந்த நபர் அப்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதற்கு மறுப்பு தெரிவித்தால் அப்பெண்ணின் மகளை கொலை செய்து விடுவதாகவும் அந்த நபர் மிரட்டியுள்ளார். இந்த சம்பவம் கடந்த ஜூன் மாதம் நடைபெற்றுள்ளது.
இந்நிலையில், தற்போது அந்த பெண் புகார் அளித்ததைத்தொடர்ந்து வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இதுகுறித்து போலீசார் கூறுகையில், “குற்றம் சாட்டப்பட்டவர் தனது குடும்ப உறுப்பினர்களுக்கு தீங்கு விளைவிப்பார் என்று அஞ்சியதால் அந்த பெண் அந்த நேரத்தில் போலீசாரை அணுகவில்லை. சம்பந்தப்பட்ட நபர் மீது ஐபிசி 376 பிரிவின்படி வழக்குப்பதிவு செய்யப்பட்டு குற்றம் சாட்டப்பட்டவர் கைது செய்யப்பட்டுள்ளார் என தெரிவித்துள்ளனர்