நாட்டின் வடமாநிலங்களில் உள்ள ஏடிஎம்களில் அதிகரித்துள்ள பணத் தட்டுப்பாட்டிற்கு 2000 ரூபாய் நோட்டுகள் பதுக்கப்பட்டதும் ஒரு காரணமாக சொல்லப்படுகிறது.
நாட்டின் பாதிக்கும் மேற்பட்ட மாநிலங்களில் உள்ள ஏடிஎம்களில் பணத் தட்டுப்பாடு நிலவிவருகிறது. இதனால் அத்தியாவசிய தேவைகளுக்கு கூட பணத்தை எடுக்க முடியாமல் மக்கள் சிரமப்பட்டு வருகின்றனர். மத்திய அரசாங்கமும், ரிசர்வ் வங்கியும் ஏடிஎம்மில் நிலவிவரும் பணத்தட்டுபாடு பிரச்னைக்கு பல்வேறு நடவடிக்கை எடுத்துவரும் நிலையில் எதிர்க்கட்சிகள் இந்தப் பணத் தட்டுப்பாடு குறித்து கடுமையான விமர்சனத்தை முன்வைத்து வருகின்றன. ஏடிஎம் பண நெருக்கடி குறித்து கருத்து தெரிவித்த நிதியமைச்சர் அருண் ஜேட்லி, வழக்கத்திற்கு மாறாக தேவை அதிகரித்துள்ளதால் பணத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது என்றும் இது தற்காலிகமான பாதிப்பு மட்டுமே என்றும் கூறியுள்ளார். விரைவில் சரிசெய்யப்பட்டு விடும் எனவும் தெரிவித்தார். ஆனால் எதிர்க்கட்சிகளோ, மத்திய அரசைக் கடுமையாக விமர்சித்துள்ளன. நாட்டில் நிதி அவசரம் ஏற்பட்டுள்ளதாக கூறியுள்ள எதிர்க்கட்சிகள் இது பணமதிப்பிழப்பு நடவடிக்கை பகுதி இரண்டா? எனவும் கேள்வி எழுப்பியுள்ளன. பிரதமர் மோடி நாட்டில் உள்ள அனைத்து பணத்தையும் நிரவ் மோடிக்கு கொடுத்துவிட்டாரா..? என காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். இதனிடையே மத்திய வங்கி அதிப்படியான 500 ரூபாய் நோட்டுகளை அச்சிடும் பணியிலும் இறங்கியுள்ளது. பணத்தை டெபாசிட் செய்வதை விட அதனை எடுக்கும் விகிதம் அதிகரித்ததுதான் பண நெருக்கடி ஏற்படுவதற்கு காரணமான கூறப்படுகிறது. திடீரென பலரும் அதிக பணத்தை எடுப்பதற்கான காரணங்களாக சில விஷயங்கள் கூறப்படுகிறது.
• பயிர் கொள்முதல் பருவம்
• இது விழா மற்றும் திருமண காலம்
• நிதி தீர்மானம் மற்றும் வைப்புத்தொகை காப்புறுதி மசோதா குறித்த அச்சம்
• கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல்
• 2000 ரூபாய் நோட்டு பதுக்கல்
• புது நோட்டுக்கு ஏற்ப முழுமையாக மேற்கொள்ளப்படாத ஏடிஎம்மின் தொழில்நுட்ப வசதி
மேற்கூறிய காரணங்களால் ஏடிஎம்மில் பணத்தட்டுப்பாடு நிலவுவதாக கூறப்படுகிறது.
இதனிடையே கடந்த மூன்று மாதங்களாகவே பணம் குறித்த அசாதாரண சூழல் நிலவி வருவதாகவும் எனவே இந்த மாதத்தின் தொடக்கத்தில் பண விநியோகம் அதிகரிக்கப்பட்டதாகவும் நிதி அமைச்சகம் வெளியிட்ட அறிக்கை ஒன்றில் கூறியுள்ளது. வங்கிகளில் தேவைக்கு அதிகமாக பணம் இருப்பதாகவும் விரைவில் பிரச்னை சரி செய்யப்படும் எனவும் நிதியமைச்சகம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.