மத்திய அரசின் தொழில் கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து மத்திய தொழில் சங்கத்தினர் நாடு தழுவிய வேலை நிறுத்தப் போராட்டத்தை இன்றும் தொடர்கின்றனர். இதனால் வங்கி சேவைகளும் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
தொழிலாளர் விரோத போக்கை கைவிட வேண்டும், புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்க வேண்டும், உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய தொழில் சங்கத்தினர் நாடு தழுவிய வேலை நிறுத்தப் போராட்டத்தை அறிவித்தனர். இந்த போராட்டத்தில் அரசு ஊழியர்கள், வங்கி ஊழியர்கள், தொழிற்சங்க ஊழியர்கள் உள்பட 10 தொழிற்சங்கங்களைச் சேர்ந்தவர்கள் பங்கேற்றுள்ளனர். இந்த போராட்டத்திற்கு பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்துள்ள நிலையில் நாடு முழுவதும் 20 கோடி தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் பங்கேற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று தொடங்கப்பட்ட போராட்டம் இன்றும் தொடர்கிறது.
இந்தப் போராட்டத்துக்கு தமிழகத்தில், மத்திய அரசு ஊழியர்கள் மகா சம்மேளனம், போக்குவரத்து தொழிற்சங்கம், மின்வாரிய தொழிற்சங்கம், டாஸ்மாக் பணியாளர்கள் சங்கம், ஆசிரியர்கள், வங்கித்துறை என பல்வேறு தரப்பினரும் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.
இந்தப் போராட்டத்தில் சில வங்கிகளைச் சேர்ந்த ஊழியர்களும் பங்கேற்றுள்ளதால் வங்கி சேவைகள் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. வேலை நிறுத்தம் குறித்து பேசிய அனைந்திந்திய வங்கி ஊழியர்கள் சங்கத்தின் பொது செயலாளர் வெங்கடாசலம், மத்திய தொழில் சங்கத்தினரின் நாடு தழுவிய வேலை நிறுத்தப் போராட்டத்தால் பல ஏடிஎம்கள் காலியாக உள்ளன. ரூ.6ஆயிரம் கோடிக்கு அளவிலான காசோலைகள் தேங்கி நிற்கின்றன. வர்த்தக பரிவர்த்தனைகள், வங்கி பரிவர்த்தனைகள் பாதிக்கப்பட்டுள்ளன என்று தெரிவித்தார்.
போராட்டம் குறித்து பேசிய இந்தியன் வங்கி ஊழியர் ஒருவர், போராட்டத்தின் காரணமாக வங்கி கிளைகள் மூடப்படவில்லை. அனைத்து வங்கி கிளைகளும் வழக்கம் போல் திறந்திருக்கின்றன. ஆனால் வங்கிகளில் உள்ள சில ஊழியர்கள் தான் போராட்டத்தில் பங்கேற்றுள்ளதாக தெரிவித்தார்.