டெல்லி முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவால் இன்று தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்யும் நிலையில், புதிய முதலமைச்சராக அதிஷி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மதுபான கொள்கை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட டெல்லியின் தற்போதைய முதலமைச்சரான அர்விந்த் கெஜ்ரிவால் சில தினங்களுக்கு முன்பு, நிபந்தனை ஜாமினில் வெளியில் வந்தார்.
ஜாமினில் வெளியே வந்தாலும், முதலமைச்சர் அலுவலகம் செல்லக்கூடாது என பல நிபந்தனைகளை அவருக்கு நீதிமன்றம் விதித்திருந்தது. இந்நிலையில், ”மக்கள் என்னை நேர்மையாளன் என்று சொல்லும் வரை முதலமைச்சர் பதவியை ஏற்கமாட்டேன் . 48 மணி நேரத்தில் எனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்வேன்” என்று அவர் தெரிவித்திருந்தார்.
இந்தவகையில், இன்றோடு அவர் தெரிவித்த 48 மணி நேரக் கால கெடு முடிவடைகிறது. இதையடுத்து இன்று காலை 11 மணிக்கு முதலமைச்சர் கெஜ்ரிவால் இல்லத்தில், எம்.எல்.ஏக்கள் கூட்டமானது நடைபெற்றது. இக்கூட்டத்தில், ஆம் ஆத்மி சட்டமன்ற கட்சி தலைவராக யாரை தேர்ந்தெடுக்கலாம் என்பது குறித்து ஆலோசனை நடைப்பெற்றது.
இதன்படி, 14 துறைகளை கையில் வைத்திருக்கும் அதிஷி பெயரை அர்விந்த் கெஜ்ரிவால் பரிந்துரை செய்ய... மற்ற எம்.ஏல்.ஏக்கள் அதனை ஏற்றுக்கொண்டனர்.
இதையடுத்து, டெல்லியின் புதிய முதலமைச்சராக அதிஷி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பினை ஆம் ஆத்மி கட்சி அறிவித்துள்ளது.
தொடர்ந்து, இன்று மலை 4 மணிக்கு துணை நிலை ஆளுநரை அரவிந்த் கெஜ்ரிவால் சந்திக்க அனுமதி கிடைத்திருக்கும் சூழலில், தனது ராஜினாமா கடிதத்தினையும் அவரிடத்தில் வழங்குவார் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கைதுக்கு பின்னர் பல விவாதங்களிலும் ஆத் ஆத்மி கட்சியின் முகமாக தோன்றி வலுவான வாதங்களை முன்வைக்கும் அதிஷி, அம்மாநில அமைச்சரவையில் ஒரே பெண் அமைச்சரராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.