உத்தரபிரதேசத்தில் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேச தொடங்கிய போது, அவரை பேசவிடாமல் அங்கிருந்த இளைஞர்கள் கோஷமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
உத்தரபிரதேச சட்டப்பேரவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. அங்கு ஆளுங்கட்சியான பாஜகவுக்கும், பிரதான எதிர்க்கட்சியான சமாஜ்வாதிக்கும் இடையே நேரடிப் போட்டி நிலவி வருகிறது. இரு கட்சிகளைச் சேர்ந்த தலைவர்களும் மாநிலம் முழுவதும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், பாஜக சார்பிலான பொதுக்கூட்டம் பிஜ்னோரில் இன்று பிற்பகல் நடைபெற்றது. இதில் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பங்கேற்றார்.
இந்நிலையில், அவர் பேசுவதற்காக ஒலிப்பெருக்கி முன்பு வந்து நின்றபோது, அங்கிருந்த நூற்றுக்கணக்கான இளைஞர்கள், கோஷமிட தொடங்கினர். வேலைவாய்ப்பை ஏற்படுத்தி தருமாறும், ராணுவத்தில் ஆள்சேர்ப்புக்கு நடவடிக்கை எடுக்குமாறும் அவர்கள் கோஷமிட்டனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து பேசிய ராஜ்நாத் சிங், கரோனா பரவல் இருந்ததால் ராணுவ ஆள்சேர்ப்பில் தாமதம் ஏற்பட்டதாகவும், விரைவில் அந்த நடவடிக்கை தொடங்கப்படும் எனவும் உறுதி அளித்தார். அதன் பின்னரே இளைஞர்கள் கோஷம் எழுப்புவதை நிறுத்தினர். இதையடுத்து, பொதுக்கூட்டத்தில் ராஜ்நாத் சிங் பேசினார்.