கோவா முதல்வராக அதிகாலையில் பதவியேற்ற பிரமோத் சாவந்த்!

கோவா முதல்வராக அதிகாலையில் பதவியேற்ற பிரமோத் சாவந்த்!
கோவா முதல்வராக அதிகாலையில் பதவியேற்ற பிரமோத் சாவந்த்!
Published on

மனோகர் பாரிகரின் மறைவை அடுத்து கோவா புதிய முதலமைச்சராக பிரமோத் சாவந்த் பதவி ஏற்றுக்கொண்டார். 

கோவா சட்டப்பேரவைக்கு 40 தொகுதிகள் உள்ளன. கடந்த ஆண்டு நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் 17 இடங்களில் வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. இருந்தாலும் பெரும்பான்மை இல்லை. ஆனால், 13 இடங்களைப் பெற்ற பாஜக, தலா 3 இடங்களில் வென்ற மகாராஷ்டிராவாடி கோமந்தக் கட்சி, கோவா பார்வர்ட் கட்சி, 3 சுயேச்சை எம்எல்ஏக்கள் ஆகியோரின் ஆதரவுடன் ஆட்சி அமைத்தது. 

பாஜக கூட்டணியில் இடம் பெற்ற கட்சிகள், மனோகர் பாரிக்கர் முதலமைச்சராக வந்தால் மட்டுமே பாஜக ஆட்சி அமைக்க, ஆதரவு தருவோம் என்றன. இதனால், மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் பதவி வகித்து வந்த மனோகர் பாரிக்கர், பதவியை ராஜினாமா செய்துவிட்டு, முதலமைச்சர் ஆனார். இதுகுறித்து காங்கிரஸ் கட்சி அப்போது சர்ச்சையை கிளப்பியது. தாங்கள் தனிப்பெரும் கட்சி என்பதால் ஆட்சி அமைக்க வாய்ப்பு அளிக்குமாறு ஆளுநர் மிரிதுலா சின்ஹாவிடம் காங்கிரஸ் கட்சி, வலியுறுத்தியது. ஆளுநர் அழைப்பு விடுக்கவில்லை.

இதற்கிடையே காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏக்கள் சுபாஷ் ஷிரோத்கர் மற்றும் தயானந்த் சோப்தே பாஜகவில் இணைந்தனர். கோவா துணை சபாநாயகர் பிரான்சிஸ் சவுஸா உயிரிழந்தார். இதனால், கோவா சட்டசபையின் பலம் 37 ஆக குறைந்தது. பிரான்சிஸ் சவுஸா மறைவை அடுத்து காங்கிரஸ் கட்சி, ஆட்சி அமைக்க மீண்டும் உரிமை கோரியது. 

இந்நிலையில் கோவா முதலமைச்சர் மனோகர் பாரிக்கர் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். இதனால் கோவா சட்டப்பேரவையின் பலம் 36 ஆக குறைந்துள்ளது. இதில் காங்கிரஸ் கட்சிக்கு 14 இடங்கள் உள்ளன. பாஜகவிடம் 12 இடங்கள் உள்ளன. தற்போது, மாநிலத்தில் தனிப்பெரும் கட்சியாக இருப்பதால், தங்களை ஆட்சி அமைக்க அழைக்குமாறு காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் ஆளுநரை சந்தித்து நேற்று கோரிக்கை வைத்தனர்.

(பிரமோத் சாவந்த்)

இதற்கிடையே, கோவா மாநிலத்தின் அடுத்த முதலமைச்சர் யார் என்ற கேள்வி எழுந்தது. இதுபற்றி பாஜக தலைவர்கள் நேற்று ஆலோசனை நடத்தி, சபாநாயகர் பிரமோத் சாவந்தை முதலமைச்சராகத் தேர்வு செய்தனர்.  இதையடுத்து ஆளுநர் மிருதுளா சின்ஹாவை சந்தித்தனர். அவர், கோவா மாநில புதிய முதலமைச்சராக பிரமோத் சாவந்திற்கு அதிகாலை 2 மணி அளவில் பதவி பிரமாணம் செய்து வைத்தார். 

பிரமோத் சாவந்த் தலைமையிலான புதிய அரசில், கோவா ஃபார்வேர்ட் கட்சியின் தலைவர் விஜய் சர்தேசாய், மகாராஷ்டிராவாடி கோமந்தக் கட்சியைச் சேர்ந்த சுதின் தவாலிகர் ஆகியோர் துணை முதல்வராக பதவியேற்றனர். மனோகர் அஸ்னோகர், ரோஹன் கவுன்டே உள்பட 9 பேர் அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர். 

இப்பதவியேற்பு விழாவில், மத்திய நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி, பாஜக தேசிய தலைவர் அமித்ஷா உள்ளிட்டோர் பங்கேற் றனர். சபாநாயகராக இருந்த பிரமோத் சாவந்த், முதல்வராக பதவியேற்றுக்கொண்டதை அடுத்து, துணை சபாநாயகராக இருந்த மைக்கேல் லோபோ, தற்காலிக சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com