அசாமில் இரண்டு வாரங்களுக்கு மேலாக கோரதாண்டவமாடும் பெரும் வெள்ளத்துக்கு இதுவரை 102 பேர் பலியாகியுள்ளனர், மேலும் 25 லட்சம் மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் அசாம் அரசு தெரிவித்துள்ளது. இதுபோல பீகாரிலும் 15 இலட்சம் மக்கள் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
நேற்றைய நிலவரப்படி அசாமில் 2,265 கிராமங்களை சேர்ந்த 25 இலட்சம் மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர், இம்மாநிலத்திலுள்ள 23 மாவட்டங்கள் வெள்ளத்தில் மூழ்கி கிடக்கிறது. கோல்பாரா மாவட்டத்தில் 4.70 இலட்சம் மக்களும், பார்பேடா மாவட்டத்தில் 3.95 இலட்சம் மக்களும், மோரிகான் மாவட்டத்தில் 3.33 இலட்சம் மக்களும் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இம்மூன்று மாவட்டங்களில்தான் வெள்ளபாதிப்பு மிக அதிகம். வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட மக்கள் தங்குவதற்காக மாநிலம் முழுவதும் 457 மீட்பு முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது.
இதைப்போலவே பீகாரிலும் மிகக்கடுமையாக வெள்ளபாதிப்பு உள்ளது. கங்கை ஆற்றங்கரையின் அருகில் உள்ள மாவட்டங்கள் அனைத்தும் வெள்ளத்தில் மூழ்கியிருக்கிறது. காகல்கான், பாகல்பூர் போன்ற மாவட்டங்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கிறது. பீகாரில் உள்ள 11 மாவட்டங்களில் 625 பஞ்சாயத்துகள் மிகக்கடுமையாக வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த பகுதிகளில் இதுவரை 10க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகவும், 15 இலட்சம் மக்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.