அசாம் மாநிலத்தில் 47 தொகுதிகளுக்கு முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. முதல்வர் சர்பானந்த சோனோவால், காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் ரிபோட் போரா உள்ளிட்ட நட்சத்திரங்களின் தொகுதிகள் இதில் அடங்கியுள்ளது. முற்பகல் வரை 26.37% வாக்குகள் பதிவாகியுள்ளன.
126 தொகுதிகளைக் கொண்ட அசாம் மாநிலத்தில் 47 தொகுதிகளுக்கான முதல் கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில், அசாம் மாநிலத்தின் முதல்வர் சர்பானந்த சோனாவாலின் மஜூலி தொகுதிக்கும் இன்றைய தினம் வாக்கு பதிவானது நடைபெறுகிறது. முதல்வருக்கு எதிராக மூன்று முறை இந்த தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராகவும், நீர்வளத் துறை அமைச்சராகவும் இருந்த ரஜீப் லோச்சன் பெகு களத்தில் இருப்பதால் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த தொகுதியாக பார்க்கப்படுகின்றது.
அதேபோல, அசாம் மாநிலத்தின் காங்கிரஸ் கட்சியின் தலைவராக உள்ள ரிபுன் போரா போபூர் தொகுதியில் போட்டியிடுகிறார். இந்த தொகுதியில் பாரதிய ஜனதா கட்சியின் தற்போதைய சட்டமன்ற உறுப்பினரான உட்புள் போராவை அவர் எதிர்கொள்கிறார்.
ஜோர்ஹட் தொகுதியைப் பொறுத்தவரை, தற்போதைய சபாநாயகராக உள்ள ஹிதேந்திரன் நாத் கோஸ்வாமி களத்தில் இருக்கிறார். இவருக்கு எதிராக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆன கோஸ்வாமி களம் இறக்கப்பட்டு உள்ளார்.
அசாம் மாநிலத்தின் மிக முக்கியமான உள்ளூர் கட்சியான ரைஜோர் தள் கட்சியின் தலைவர் அகில் கோகாய், சிப்சாஹர் தொகுதியில் சுயேச்சையாக களம் இறங்குவது பலரையும் வியப்புக்குள்ளாக்கியது. இந்த தொகுதிக்கும் இன்றைய தினம் வாக்கு பதிவானது நடைபெறுகிறது. தேசிய குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான போராட்டங்களில் கலந்து கொண்டதற்காக இவர் சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில், இவரது 84 வயதான தாய் தேர்தல் பரப்புரைகளில் ஈடுபட்டதால் மிக முக்கிய பேசுபொருளாக இந்த தொகுதி இருந்தது.
15 ஆண்டுகள் அசாம் மாநிலத்தை தொடர்ந்து ஆட்சி செய்த வரும் மறைந்த காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான முன்னாள் முதல்வர் தருண் கோகாயின் தொகுதியான தித்தாபூர் தொகுதியிலும் இன்றைய தினம் வாக்கு பதிவு நடைபெறுகிறது. இந்த தொகுதியில் பாரதிய ஜனதா கட்சியும் காங்கிரஸ் கட்சியும் நேருக்கு நேர் மோதுகிறது.
அசாம் மாநிலத்தின் முக்கிய அமைச்சர்களாக உள்ள ரஞ்சித் தத்தா, நபா குமார் தியோல், உள்ள பலரது தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இன்றையதினம் நடைபெறுகிறது.
முதல்கட்ட தேர்தலிலேயே முக்கிய தலைவர்களின் தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெறுவதால் அசாம் மாநில தேர்தல் களம் களைகட்டியுள்ளது.
- நிரஞ்சன்