சட்டமன்றத் தேர்தலை எதிர்கொண்டுள்ள அசாம் மாநிலத்தில் கூட்டணிகள் குறித்த காட்சிகள் மாறிப்போயிருக்கின்றன. அங்கு 3 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அங்குள்ள களநிலவரம் குறித்து விவரிக்கிறது இந்தக்கட்டுரை.
நாடு சுதந்திரம் அடைந்ததிலிருந்து 30 ஆண்டுகள் அசாம் மாநிலத்தை காங்கிரஸ் கட்சி ஆண்டு வந்தது.1978-ஆம் ஆண்டு ஜனதா கட்சியைச் சேர்ந்த கோலப் போர்போரா ஆட்சியை கைப்பற்றினார். அதன் பிறகு காங்கிரஸ் கட்சி அசாமில் செல்வாக்கை இழக்கத் துவங்கியது. அதன்பிறகு அசாம் கணபரிஷத் உள்ளிட்ட மாநில கட்சிகள் பலம் பெற்றன. மீண்டும் 2001-ல் ஆட்சியை பிடித்தது காங்கிரஸ். 2016 வரை காங்கிரஸ் கட்சி தொடர்ந்து 15 ஆண்டுகள் அதிகாரத்தில் இருந்தது.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் அசாமில் நீண்ட காலம் ஆட்சி செய்தவர் என்ற பெருமைக்கு உரியவருமான தருண் கோகாய் அண்மையில் மறைந்தார். அதற்குப்பிறகு முன்னணி தலைவர் இல்லாத சூழலில் காங்கிரஸ் கட்சி சட்டமன்றத் தேர்தலை சந்திக்கிறது.
கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் சுமார் ஆறு சதவீதம் வரை காங்கிரஸ் கட்சி தனது தனிப்பட்ட வாக்கு வங்கியை அசாம் மாநிலத்தில் அதிகரித்திருந்தது. இத்தேர்தலில், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சி, அன்சாக்லிக் கண மார்ச்சா, அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி ஆகிய கட்சிகளை கூட்டணியில் இணைத்துக்கொண்டு மெகா கூட்டணியை அமைத்து உள்ளது காங்கிரஸ்.
பாரதிய ஜனதா கட்சியின் நீண்ட நாட்களாக கூட்டணியில் இருந்த போடோ லேண்ட் பீப்பிள்ஸ் ஃப்ரெண்ட் தனது கூட்டணியை முறித்துக் கொண்டு காங்கிரஸ் கட்சியின் மெகா கூட்டணியில் இணைந்துள்ளது. ஆனால், பாஜகவுடன் அசாம் கணபரிஷத் கூட்டணியில் நீடிக்கிறது.
இப்படி 7 கட்சிகள் எதிரணியில் இருக்க ஆளும் பாரதிய ஜனதா கட்சி, கூட்டணி வியூகங்களைவிட பிரச்சார வியூகங்களை பெரிதாக நம்புகிறது. குறிப்பாக காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியில் இன்னும் முதல்வர் வேட்பாளர் இறுதி செய்யப்படாத நிலையில் , முதல்வர் வேட்பாளராக சர்பானந்த சோனோவாலை முன்னிறுத்தி வருகிறது பாரதிய ஜனதா கட்சி.
அக்கட்சியின் முன்னணி தலைவர்கள் பலரும் தொடர்ந்து அசாம் மாநிலத்தில் தீவிர பரப்புரைகளில் ஈடுபட்டு வருகிறார்கள். ஆயினும் தேர்தல் முடிவுகள் எளிதாக இருக்காது என்பதால், சுவாரஸ்யத்துக்கும், சலசலப்புக்கும் குறைவிருக்காது என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.