நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெறும் மக்களவைத் தொகுதிகளுக்கான 2வது கட்ட வாக்குப்பதிவு நேற்று (ஏப்ரல் 26) 89 தொகுதிகளில் நடைபெற்றது. இதில் அசாமில் மொத்தமுள்ள 14 மக்களவைத் தொகுதிகளுக்கும் 3 கட்டங்களாகத் தேர்தல் நடைபெற உள்ளது. ஏப்ரல் 19ஆம் தேதி 5 தொகுதிகளுக்கும், ஏப்ரல் 26ஆம் தேதி 5 தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்துள்ளது.
இந்த நிலையில், ‘பாஜகவுக்கு ஓட்டு போடவில்லை எனில், புல்டோசர்களைக் கொண்டு வீடுகளை இடிப்போம்’ என வனத்துறையினர் மிரட்டியதாக கிராம மக்கள் உள்ளூர் நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளனர்.
ஹைலகண்டி மாவட்டத்தில் உள்ள புடுகுசி கிராமத்தைச் சேர்ந்த சோய்துல் அலி, தில்வார் ஹுசைன், மொஜ்முன் நெஹர் மற்றும் அலிமுன் நெசா ஆகியோர் கரீம்கஞ்ச் சி.ஜே.எம் நீதிமன்றத்தில் இதுதொடர்பாக மனு அளித்துள்ளனர். கடந்த ஏப்ரல் 24ஆம் தேதி அளிக்கப்பட்ட இந்த மனுவில், “பாஜகவுக்கு ஓட்டு போடவில்லை எனில், புல்டோசர்களைக் கொண்டு வீடுகளை இடிப்போம் என்று கடந்த ஏப்ரல் 21 முதல் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள கிராமங்களுக்கு வனத்துறை அதிகாரிகள் சென்று மிரட்டுகின்றனர். இதுகுறித்த ஆதாரங்கள் எங்களிடம் இருக்கின்றன” என குறிப்பிட்டுள்ளனர்.
இம்மாநிலத்தில் முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் கடந்த 3 நாட்களாக அசாம் போலீஸ் கமாண்டோ படையினர் மற்றும் வனத்துறையினர் ஒவ்வொரு வீட்டின் கதவையும் தட்டியதாகவும், அப்படி பாஜவுக்கு ஓட்டு போடவில்லை எனில், ஜூன் 4க்குப் பிறகு அகதிகள் எனச் சொல்லி உங்கள் வீடுகள் இடிக்கப்படும் என அவர்கள் மிரட்டியதாகவும் அந்தப் புகாரில் தெரிவித்துள்ளனர். அந்த மனுவில் முக்கியமான 9 வனத்துறை அதிகாரிகளின் பெயர்களையும் குறிப்பிட்டுள்ளனர். மேலும், அந்த 9 பேருடன் அசாம் மாநில வனத் துறையின் சிறப்புத் தலைமைச் செயலாளரான எம்.கே.யாதவா பெயரையும் சேர்த்துள்ளனர். இந்தப் பட்டியலில் மேலும் பல வன ஊழியர்கள், காவலர்கள், அஸ்ஸாம் போலீஸ் கமாண்டோக்கள் ஆகியோரையும் சேர்த்துள்ளனர்.
இந்த விஷயம் குறித்து ஆங்கில ஊடகமான The WIRE தேர்தல் ஆணையத்திடம் பதில் பெற முயன்றுள்ளது. ஆனால் இதுவரை பதிலைப் பெற முடியவில்லையாம். இது ஒருபுறமிருக்க, மறுபுறம் வாக்குப்பதிவு நாளில் (நேற்று) சில்சார் செல்லும் 6 ரயில்கள் திடீரென ரத்து செய்யப்பட்டதற்கும் தேர்தல் ஆணையத்திடம் தி வயர் பதில் கோரியுள்ளது.
முன்னதாக, கடந்த ஏப்ரல் 17ஆம் தேதி பாஜக எம்.எல்.ஏவான விஜய் மல்லாகர், அக்கட்சியைச் சேர்ந்த வேட்பாளருக்கு வாக்கு சேகரித்தபோது இதேபோன்று பேசியிருந்தது இணையத்தில் வைரலாகி இருந்தது.
அப்போது அவர், “நீங்கள் பாஜகவுக்கு வாக்களிக்கவில்லை என்றால், அதன் விளைவுகளைச் சந்திக்க நேரிடும். எங்களுக்கு வாக்களிக்காதவர்களுக்கு என்ன நடக்கும் என்பது உங்களுக்குத் தெரியும். அவர்கள் வீடுகளுக்கு புல்டோசர் வரும்” எனத் தெரிவித்திருந்தார்.