அசாம் மாநில சட்டமன்றத் தேர்தல்களத்தில் முதலமைச்சர் சோனாவால் உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் போட்டியிடும் தொகுதிகள் என்னென்ன என்று விரிவாக பார்க்கலாம்.
வடகிழக்கு மாநிலங்களில் மிகப் பெரிய மாநிலமான அசாமில் 126 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. 3 கட்டங்களாக இங்கு தேர்தல் நடைபெற்றது. அசாம் மாநில முதல்வர் சர்பானந்த சோனாவால், மஜூலி தொகுதியில் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து ரஜீப் லோச்சன் பெகு களத்தில் இருக்கிறார். ரஜீப் லோச்சன் பெகு, மூன்று முறை மஜூலி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராகவும், நீர்வளத்துறை அமைச்சராகவும் இருந்தவர். போட்டி மிகவும் கடுமையாக இருக்கும் என சொல்லப்படுவதால் கூடுதல் பரபரப்புடன் இந்த தொகுதி உற்று நோக்கப்படுகிறது.
காங்கிரஸ் கட்சியின் அசைக்க முடியாத தலைவராக இருந்து பின்னர் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்த ஹெமனந்த் பிஸ்வாஷ் சர்மா, ஜலுக்பாரி தொகுதியில் போட்டியிடுகிறார். அசாமில் பாஜக ஆட்சி அமைக்க முக்கிய காரணமாக விளங்கியவர் என்பதால் ஹெமனந்த் பிஸ்வாஷ் சர்மா அதிக கவனம் பெற்றுள்ளார். அசாம் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவராக உள்ள ரிபுன் போரா போட்டியிடும் போபூர் தொகுதியும் அனல்பறக்கும் நட்சத்திர தொகுதியாக உள்ளது. இந்த தொகுதியில் பாரதிய ஜனதா கட்சியின் தற்போதைய சட்டமன்ற உறுப்பினரான உட்புள் போரா களம் காண்கிறார்.
தற்போதைய சபாநாயகர் ஹிதேந்திர நாத் கோஸ்வாமி., ஜோர்ஹட் தொகுதியில் போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் முன்னாள் எம்எல்ஏ கோஸ்வாமி களம் கண்டுள்ளார். அசாம் மாநிலத்தின் மிக முக்கியமான உள்ளூர் கட்சியான ரைஜோர் தள் கட்சியின் தலைவர் அகில் கோகாய் சிப்சாஹர் தொகுதியில் சுயேச்சையாக களம் கண்டுள்ளார். தேசிய குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான போராட்டங்களில் கலந்து கொண்டதற்காக இவர் சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில் இவரது 84 வயதான தாய் தேர்தல் பரப்புரைகளில் ஈடுபட்டதால் மிக முக்கிய பேசுபொருளாக இந்த தொகுதி இருந்தது.
அசாம் மாநிலத்தின் முக்கிய அமைச்சர்களான ரஞ்சித் தத்தா, நபா குமார் டோலே , சந்திரமோகன் பட்டோவ்ரி, சித்தார்த்தா பட்டாச்சாரியா, பாஜக மாநில தலைவர் ரஞ்சித் குமார் தாஸ் ஆகியோரின் தொகுதிகளும் அதிகம் கவனிக்கப்படும் தொகுதிகளாகவே இருக்கின்றன.