அசாம் மாநிலத்தில் விஷ சாராயம் குடித்து 32 தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோலகேட் மாவட்டத்தின் சல்மாரா பகுதியிலுள்ள டீ தோட்டத்தில் கூலி தொழிலாளர்கள் கூட்டாக நாட்டு சாராயம் அருந்தியுள்ளனர். ரூ10, ரூ20 விற்கப்பட்ட சாராயத்தை நூற்றுக்கும் மேற்பட்டோர் அருந்தியதாக தெரிகிறது. சாராயம் குடித்த தொழிலாளர்களுக்கு உடல்நிலை மோசமடைந்துள்ளது. உடனடியாக அவர் கவுகாத்தி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
இருப்பினும், விஷ சாராயம் குடித்ததில் 12 பேர் உயிரிழந்ததாக முதலில் சொல்லப்பட்டது. பின்னர், சிகிச்சை பலனின்றி பலர் உயிரிழந்தனர். தற்போதைய நிலவரப்படி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 32 ஆக உயர்ந்துள்ளது. கள்ளச்சாராயம் குடித்து 30க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவம் அசாம் மாநிலத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பாக அசாம் அரசு விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. கலால் துறை அதிகாரிகள் இருவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். கள்ளச் சாராய வியாபாரி கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்தத் துயரமான சம்பவத்திற்கு மாவட்ட போலீசார் மற்றும் கலால் துறை அதிகாரிகள்தான் காரணம் என்று உள்ளூர் மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இந்தத் துறையினர் உரிய நடவடிக்கை எடுத்திருந்த உயிரிழப்புகளை தடுத்திருக்கலாம் என்று அவர்கள் கூறுகின்றனர்.