கேரளாவில் உள்ள இடுக்கி மாவட்டத்தில் கிருஷ்ணன் நாயர் - கௌசல்யா தம்பதிக்கு மகனாக 1952-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 15-ம் தேதி பிறந்தார் விஜயகுமார். அவரது தந்தையும் ஒரு போலீஸ் அதிகாரியாக இருந்தவர்.
ஆரம்பக் கல்வியை கேரளாவில் முடித்த விஜயகுமார் பட்டப்படிப்பை சென்னைப் பல்கலைக்கழகத்தில் முடித்தார். முதுகலை சட்டப்படிப்பை முடித்த பின் சிவில் சர்வீஸ் தேர்வெழுதினார். ஐஏஎஸ் அதிகாரியாகத் தேர்வு செய்யப்படும் அளவுக்கு மதிப்பெண் பெற்றாலும் ஐபிஎஸ் துறையைக் கேட்டுப் பெற்றார். தமிழக கேடராக 1975-ம் ஆண்டு பட்டுக்கோட்டை ஏஎஸ்பி ஆக நியமிக்கப்பட்டார்.
பின்னர் திருச்சி, அதன்பின் செம்பியம் ஏஎஸ்பியாகப் பணியாற்றினார். 1977-ல் அவருக்குத் திருமணமானது. மீனா அவரது மனைவி பெயர். அவர்களுக்கு அர்ஜுன் குமார், அஷ்வினி என ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர். 1975-ம் ஆண்டு முதல் 1982-ம் ஆண்டு வரை ஏஎஸ்பியாகப் பதவி வகித்த அவர் 1982-ம் ஆண்டு எஸ்.பி-யாகப் பதவி உயர்வு பெற்று ஓராண்டு தருமபுரியிலும்,1983-ம் ஆண்டு சேலத்திலும் பணியாற்றினார்.
1985-ம் ஆண்டு அயல் பணியாக அப்போதைய பிரதமர் ராஜீவ் காந்தியின் பாதுகாப்புக்காக உருவாக்கப்பட்ட சிறப்புப் பாதுகாப்புப் பிரிவுக்கு (NSG) மாற்றப்பட்டு 5 ஆண்டுகள் சிறப்பாகப் பணியாற்றினார். பின்னர் 1990-க்குப் பின் தமிழகம் திரும்பிய அவர் திண்டுக்கல் எஸ்பியாகவும், பின்னர் வேலூர் எஸ்பியாகவும் பணியாற்றினார்.
பின்னர், 1991-ல் தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா தனக்கான ஒரு பாதுகாப்புப் பிரிவாக விஜயகுமார் தலைமையில் எஸ்எஸ்ஜி (SSG) சிறப்புப் பாதுகாப்புப் பிரிவு ஒன்றை உருவாக்கினார். இந்தக் காலகட்டத்தில் டிஐஜியாகப் பதவி உயர்வு பெற்றார். அதன் பின்னர் ஐஜியாகப் பதவி உயர்வு பெற்ற அவர், 1997-ல் முதன்முறையாக உருவாக்கப்பட்ட தெற்கு மண்டல ஐஜியானார்.
பின்னர், 1998-ல் மீண்டும் அயல் பணியாக எல்லைப் பாதுகாப்புப் படை ஐஜியாகச் சென்றார். பின்னர் செயலாக்கப் பிரிவு ஐஜியாகப் பணியாற்றினார். 2001-ல் ஆட்சிக்கு வந்த ஜெயலலிதா அவரை வீரப்பன் வேட்டைக்காகத் தமிழகத்துக்கு அழைத்து வந்தார், அதில் சில காலம் பணியாற்றிய அவர் 2001-ம் ஆண்டு சென்னை காவல் ஆணையராக நியமிக்கப்பட்டார்.
சென்னை காவல் ஆணையராக விஜயகுமார் பணியாற்றிய காலகட்டத்தில் ரவுடிகள் கடுமையாக ஒடுக்கப்பட்டனர். பல என்கவுன்ட்டர்கள் நடத்தப்பட்டன. அதில் முக்கியமானது தாதா வீரமணி என்கவுன்ட்டர் ஆகும். அதன் பின்னர் 2004-ம் ஆண்டு வீரப்பன் வேட்டைக்காக சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டார். யாராலும் பிடிக்க முடியாத வீரப்பனைப் பிடித்தார். அதன் பின்னர் 2008-ம் ஆண்டு தமிழக சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபியாக நியமிக்கப்பட்டார்.
அதன் பின்னர் அயல் பணியாக ஹைதராபாத்தில் அமைந்துள்ள ஐபிஎஸ் அதிகாரிகள் பயிற்சி கல்லூரிக்குத் தலைவராக நியமிக்கப்பட்டார். பின்னர் டிஜிபியாகப் பதவி உயர்வு பெற்று சிஆர்பிஎஃப் பிரிவுக்குச் சென்றார். 2012-ம் ஆண்டு காவல் துறையிலிருந்து ஓய்வு பெற்றார். ஓய்வுக்குப் பின்னும் அவரை மத்திய அரசு மத்திய உள்துறை அமைச்சகத்தின் ஆலோசகராக நியமித்தது. 2018-ம் ஆண்டு ஜம்மு காஷ்மீர் ஆளுநரின் ஆலோசகராக நியமிக்கப்பட்டார்.
இப்போது 67 வயதாகும் விஜயகுமார் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார்.