திருப்பதி ஏழுமலையான் கோவிலை மத்திய அரசின் கட்டுபாட்டில் கொண்டு வருவது தொடர்பான சர்ச்சைக்குரிய கடிதத்தை மத்திய தொல்லியல் துறை திரும்பப் பெற்றது
தமக்கு தெரியாமலேயே அக்கடிதம் எழுதப்பட்டு விட்டதாகவும் எனவே அதை திரும்பப் பெறுவதாகவும் தொல்லியல் துறை இயக்குநர் உஷா சர்மா தொலைபேசியில் தெரிவித்ததாக திருமலை திருப்பதி தேவஸ்தானம் கூறியுள்ளது.
திருமலையில் உள்ள பழங்கால கட்டிடங்களுக்கு பாதுகாப்பு இல்லை எனவும், அக்கட்டடங்களை தேவஸ்தான அதிகாரிகள் தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப உடைத்து மாற்றங்கள் செய்வதாக புகார் வந்துள்ளது என தொல்லியல்துறையின் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது. பக்தர்கள் வழங்கிய விலை மதிப்பு மிக்க காணிக்கைகள் கூட உரிய பாதுகாப்புடன் வைக்கப்படவில்லை எனவும் மன்னர்கள், பேரரசர்கள் வழங்கிய ஆபரணங்களுக்கு பாதுகாப்பு இல்லை எனவும் அதில் கூறப்பட்டிருந்தது. எனவே திருமலை தேவஸ்தானத்திற்குட்பட்ட கோயில்களை புராதன சின்னங்களாக அறிவித்து தங்கள் பொறுப்பில் எடுத்துக்கொள்வதற்கான சாத்தியக்கூறுகளை ஆராயப் போவதாகவும் அக்கடிதத்தில் கூறப்பட்டிருந்தது. இதற்கு ஆந்திராவில் கடும் எதிர்ப்பு கிளம்பியிருந்தது.