“மதுரா கோயிலை இடித்துவிட்டு மசூதி கட்டிய ஒளரங்கசீப்” - ஆர்டிஐ கேள்விக்கு ஏஎஸ்ஐ பதில்!

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் கேட்கப்பட்ட கேள்விக்கு, மதுராவில் கோயிலை இடித்துவிட்டு ஒளரங்கசீப் மசூதியைக் கட்டியதாக இந்திய தொல்பொருள் ஆய்வுக் கழகம் (ஏஎஸ்ஐ) தெரிவித்துள்ளது.
கிருஷ்ண ஜென்மபூமி
கிருஷ்ண ஜென்மபூமிட்விட்டர்
Published on

உத்தரப்பிரதேசம் அயோத்தியைப்போன்று, மதுராவில் கிருஷ்ண ஜென்மபூமி கோயிலை ஒட்டியுள்ள ஷாயி இத்கா மசூதி மீதும் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. இதன் மேல்முறையீட்டு வழக்குகள் அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வருகின்றன. அதாவது, மதுராவிலிருந்த கிருஷ்ணர் பிறந்த இடமாகக் கருதப்படும் இடத்தில் கேசவ் தேவ் கோயில் இருந்தது என்றும், அது முகலாய மன்னர் ஒளரங்கசீப்பால் இடிக்கப்பட்டது என்றும் கூறப்பட்டு வழக்குகள் தொடுக்கப்பட்டுள்ளன. மேலும், இந்த இடத்தின் ஒரு பகுதியில்தான், அதாவது தற்போதுள்ள ஷாயி இத்கா மசூதி ஒளரங்கசீப்பால் கட்டப்பட்டதாக வரலாற்றுக் குறிப்புகள் கூறுகின்றன. அதன்பிறகு மீதியிருந்த பகுதியில் புதிதாக கிருஷ்ண ஜென்மபூமி கோயில் கட்டப்பட்டுள்ளது. இதனால், இக்கோயிலின் கருவறை உள்ள இடம் உண்மையானது அல்ல எனவும், பழைய கோயிலின் கருவறையை கண்டறிந்து அடையாளப்படுத்தும்படியும் வழக்கு தொடுக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் கேட்கப்பட்ட கேள்விக்கு, மதுராவில் கோயிலை இடித்துவிட்டு ஒளரங்கசீப் மசூதியைக் கட்டியதாக இந்திய தொல்பொருள் ஆய்வுக் கழகம் (ஏஎஸ்ஐ) தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக உத்தரப்பிரதேச மாநிலம் மெயின்புரியைச் சேர்ந்த அஜய் பிரதாப் சிங் என்பவர், இந்திய தொல்பொருள் ஆய்வுக் கழகத்திடம் (ஏஎஸ்ஐ) தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு ஏஎஸ்ஐயின் ஆக்ரா பிராந்திய அலுவலகம் பதில் அளித்துள்ளது. அதில், மதுராவிலிருந்த கோயிலை இடித்துவிட்டு முகலாயப் பேரரசர் ஒளரங்கசீப் அங்கு ஷாயி இத்கா மசூதியை கட்டியதாக ஏஎஸ்ஐ தெரிவித்துள்ளது. எனினும், அக்கோயிலை கிருஷ்ண ஜென்மபூமி எனக் குறிப்பிடாமல் கேசவ் தேவ் கோயில் எனத் தெரிவித்துள்ளது. அதாவது, ஒளரங்கசீப்பால் இடிக்கப்பட்டது கிருஷ்ண ஜென்ம பூமி கோயில் என இந்திய தொல்பொருள் ஆய்வுக் கழகம் நேரடியாகக் குறிப்பிடவில்லை. எனினும், இதற்கு ஆதாரமாக 1920ஆம் ஆண்டில் ஆங்கிலேயர் ஆட்சியில் பதிவான அரசு கெஜட் குறிப்புகளைச் சுட்டிக் காட்டியுள்ளது.

இதன் காரணமாக, மத்திய அரசின்கீழ் செயல்படும் ஏஎஸ்ஐ தெரிவித்த தகவல் மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. காரணம், மதுராவில் கிருஷ்ண ஜென்மபூமி கோயிலை ஒட்டியுள்ள ஷாயி இத்கா மசூதி மீதும் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. ஷாயி இத்கா மசூதி மீது வழக்கு தொடுத்த வலதுசாரி அமைப்பின் வழக்கறிஞர் மகேந்திர பிரதாப் சிங், ‘‘இந்த மசூதி மீதான வழக்கு பிப்ரவரி 22ஆம் தேதி அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வருகிறது. அப்போது ஏஎஸ்ஐ அளித்த இந்த தகவலை முக்கியமான சான்றாக வைப்போம். வரலாற்றுச் சான்றுகளின் அடிப்படையில், ஔரங்கசீப் 1670ஆம் ஆண்டு கோயிலை இடிக்க ஆணையிட்டார் என்று எங்கள் மனுவில் குறிப்பிட்டிருந்தோம். அதைத் தொடர்ந்து அங்கு ஷாஹி இத்கா மசூதி கட்டப்பட்டது. தற்போது அந்த விவகாரத்தில் ஆர்டிஐ மூலம் கேட்கப்பட்ட கேள்விக்கு ஏஎஸ்ஐ பதில் அளித்துள்ளது. இந்தச் சான்றை பிப்ரவரி 22 விசாரணையின்போது எங்கள் தரப்பில் முன்வைப்போம்” எனத் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com