பிகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கூட்டணியிலிருந்து மீண்டும் வெளியேறுவார் என வதந்தி பரவிய நிலையில், இன்று பிகார் மாநில ஆளுநர் ராஜேந்திர அர்லேகரைச் சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை கொடுத்துள்ளார். இதன் பின் பாஜக ஆதரவுடன் மீண்டும் ஆட்சியமைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ராஜினாமா செய்த பின் செய்தியாளர்களைச் சந்தித்த நிதிஷ்குமார், “ராஜினாமா செய்துவிட்டேன். பல்வேறு தரப்பிடம் வந்த கோரிக்கையின் அடிப்படையிலும், அரசியல் சூழல் காரணமாகவும் லாலுவுடனான கூட்டணியில் இருந்து வெளியேறினேன். லாலு காங்கிரஸ் உடனான மகா கூட்டணி ஆட்சி முறிந்துவிட்டது. விரைவில் புதிய கூட்டணியை அமைப்பேன். பாஜக உடனான கூட்டணி அமைப்பது குறித்து விரைவில் முடிவெடுக்கப்படும்” என தெரிவித்துள்ளார். கடந்த 9 ஆண்டுகளில் 4 ஆவது முறையாக கூட்டணியை மாற்றியுள்ளார் நிதிஷ்குமார்.
இந்நிலையில் இதுகுறித்து புதியதலைமுறையிடம் பாஜக செய்தி தொடர்பாளர் ஆசிர்வாதம் ஆச்சாரி தனது கருத்துக்களை பிரத்யேகமாக பகிர்ந்துகொண்டார். அவர் கூறியதாவது, “2019 ஆம் ஆண்டு லோக்சபா தேர்தலில் நிதிஷ்குமார் எங்களுடன் இருந்தார். அனைத்து தொகுதிகளிலும் நாங்கள் வென்றோம். 2020களிலும் எங்களுடன் இணைந்தார். ஆனால் திடீரென்று பாஜக உடனான கூட்டணியை முறித்துக்கொண்டு கடந்த 14 மாதங்களாக ஆர்ஜேடி உடன் கூட்டணி வைத்து முதலமைச்சராக இருந்தார். ஆனால் அந்த அதிகாரத்தை அவர் பயன்படுத்த முடியாத வகையில் லாலு பிரசாத் யாதவ் மற்றும் அவரது குடும்பத்தினர் நிதிஷ்குமார் கைகளை கட்டிப்போட்டனர்.
அவர் ஒரு முதலமைச்சர். ஆனால் எந்த ஒரு சுயமுடிவுகளையும் எடுக்க முடியவில்லை. பீகார் நலனுக்காக நாங்கள் அறிவித்த அந்த திட்டங்களைக்கூட அவரால் அங்கு நடைமுறைப்படுத்த முடியாத நிலையில் இருந்தார். கூட்டணி ஆர்ஜேடியுடன் தொடர்ந்தால், இந்த குடும்ப ஆட்சிக்கு நம்மை நாமே சரண்டர் செய்துவிட்டால், பீகார் மக்களது நலன் பாதிக்கப்படும். அதன் காரணமாகவேனும் இந்த கூட்டணியை விட்டு விலகிப்போவது என்பதே நல்லது எனும் முடிவை அவர் எடுத்துள்ளார்” என தெரிவித்தார்.