இந்தியாவில் கொரோனா பரவல் காரணமாக மார்ச் மாதம் முதலே பள்ளிகள் மூடப்பட்டுள்ளதால் எதிர்காலத்தில் ரூ. 30 லட்சம் கோடிக்கும் அதிகமான அளவுக்கு வருவாய் இழப்பு ஏற்படும் என்று உலக வங்கி கணித்துள்ளது.
இதுதொடர்பாக உலக வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில், "நீண்டகாலம் பள்ளிகள் திறக்கப்படாமல் இருப்பதால், இந்தியா மிகப்பெரிய அளவில் வருவாய் இழப்பை எதிர்கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது. இன்றைய நிலையில், அதன் மதிப்பு 40 ஆயிரம் கோடி டாலர் அளவுக்கு இருக்கும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வருவாய் இழப்பைத் தாண்டி, மாணவர்களுக்கு பள்ளிப்பாடத் திட்டங்களில் கணிசமான அளவில் கற்றல் இழப்புகளும் ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. தெற்காசிய நாடுகள் முழுவதும் பள்ளிகள் மூடப்பட்டுள்ளதால் பொருளாதார இழப்பு ரூ. 46.65 லட்சம் கோடியாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்தியா உள்ளிட்ட தெற்காசிய நாடுகளில் பள்ளிகள் மூடப்பட்டுள்ளது மாணவர்களிடையே கடுமையான தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளது. மேலும், தொடக்க மற்றும் இடைநிலைக்கல்வியில் இருந்து 39.1 கோடி பள்ளி மாணவர்கள் வெளியேறியுள்ளனர். 65 லட்சம் மாணவர்கள் பள்ளிப்படிப்பை விட்டு வெளியேறுவதற்கு கொரோனா நோய்த்தொற்று பேரிடர் காரணமாக அமையலாம் என்று உலக வங்கி தெரிவித்துள்ளது.