தாயை பார்த்து ஆற்றில் குதித்த மூன்று குழந்தைகள் - நெஞ்சை பிழியும் சோகச் சம்பவம்

தாயை பார்த்து ஆற்றில் குதித்த மூன்று குழந்தைகள் - நெஞ்சை பிழியும் சோகச் சம்பவம்
தாயை பார்த்து ஆற்றில் குதித்த மூன்று குழந்தைகள் - நெஞ்சை பிழியும் சோகச் சம்பவம்
Published on

தென்மேற்கு பருவ மழையால் பீகார், உத்தரப்பிரதேசம் மற்றும் அசாம் உள்ளிட்ட மாநிலங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் அசாமின் லட்சுமிபூர், சோனித்பூர், ஜோர்ஹாட், திப்ருகார், சிவசாகர் உள்ளிட்ட 30 மாவட்டங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இந்த மழையால் சுமார் 90 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 

அத்துடன் 3 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்த மழையால் இதுவரை மொத்தமாக 67 பேர் உயிரிழந்துள்ளனர். வெள்ளத்தால் மக்கள் மட்டுமின்றி வன விலங்குகளும் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளன. பல விலங்குகள் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்துள்ளன.

இதனையடுத்து அங்கு நிவாரண பணிகள் தீவிரம் அடைந்துள்ளது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு தொண்டு நிறுவனங்களும், பொதுமக்களும் உதவ வேண்டுமென பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். 

இந்நிலையில் பீகார் வெள்ளத்தின் கொடுமையை விளக்கும் விதமாக தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த 3 வயது குழந்தையின் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. ஷிடால்பட்டி என்ற இடத்தில் ராணி தேவி என்பவர் தன்னுடைய 4 குழந்தைகளுடன் அருகில் உள்ள ஆற்றுக்கு குளிக்கச் சென்றுள்ளார். 

வெள்ளத்தினால் ஆற்றில் கடுமையான நீரோட்டம் இருந்துள்ளது. அப்போது ஒரு குழந்தை தண்ணீரில் தவறி விழுந்துள்ளது. அதனைக் காப்பாற்றுவதற்காக ராணி தேவி ஆற்றுக்குள் குதித்துள்ளார். தாய் ஆற்றுக்குள் குதிப்பதை பார்த்த மற்ற மூன்று குழந்தைகளும் ஆற்றில் குதித்துள்ளனர். 

இதனைக் கண்ட அருகில் இருந்தவர்கள் ஆற்றுக்குள் இறங்கி ஒரு குழந்தையையை மட்டுமே மீட்டனர். ராணி தேவியும், ஒரு குழந்தையும் மட்டுமே உயிர் பிழைத்த நிலையில் மற்ற 3 குழந்தைகளும் ஆற்றில் அடித்துச்செல்லப்பட்டனர்.

இந்நிலையில் 3 வயது குழந்தையான அர்ஜூன் உடல் மீட்கப்பட்டுள்ளது. அந்தப் புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. பலரும் குழந்தைக்காக தங்களின் இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com